தூத்துக்குடி அருகே இன்று காலை விபத்து- சரக்கு வாகனம் கவிழ்ந்து 5 பெண்கள் பலி

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடியில் இன்று காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

கால்வாயில் இருந்து சரக்கு வாகனத்தை ஜே.சி.பி. மூலம் மீட்பதை படத்தில் காணலாம்.

நெல்லை மாவட்டம் பாளை மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளை சேர்ந்த பெண்கள் வயல் வேலைகளுக்கு பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று அதிகாலை இந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 33 பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜபுரத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.

அந்த வாகனத்தை மணக்காடு பகுதியை சேர்ந்த சித்திரை (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார். இன்று காலை மணியாச்சி போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தில் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து தலைகுப்புற அங்கு சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பெரும்பாலானவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அதில் மணப்படை வீடு திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பேச்சியம்மாள் (65), சுந்தரதேவர் மனைவி செல்லத்தாய் (60), மாரியம்மாள் (50), மகாராஜன் மனைவி லிங்கம்மாள் (35), மற்றொரு மகாராஜன் மனைவி பேச்சியம்மாள் (30) மற்றும் மணிகண்டன் மனைவி விஜி (36) ஆகிய 6 பேரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 22 பேர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான 5 பேர்களின் உடலைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்கள் யார்? யார்? என விசாரணை நடந்து வருகிறது. இந்த கோர விபத்து தொடர்பாக டிரைவர் சித்திரையை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

malaimalar