தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

சென்னை : இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலிய நிறுவனம் இணைந்து, நாகை மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப்.,17) அடிக்கல் நாட்டுகிறார்.

நாகை மாவட்டத்தில், இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலிய நிறுவனமும் இணைந்து, ஆண்டுக்கு, 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலையை அமைக்க உள்ளன. திட்டச்செலவு, 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய். அங்கு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும். சென்னை, மணலியில், சென்னை பெட்ரோலியம் நிறுவனம், 500 கோடி ரூபாய் செலவில், மாசு அளவை குறைக்க, பெட்ரோலில் இருந்து, கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலையை அமைத்து உள்ளது.

இந்தியன் ஆயில், எண்ணுார் திரவநிலை எரிவாயு முனையத்தில் இருந்து, எரிவாயு எடுத்து செல்ல, எண்ணுார் – திருவள்ளூர் – பெங்களூரு – புதுச்சேரி – நாகை – மயிலாடுதுறை – துாத்துக்குடி இடையில், 700 கோடி ரூபாயில், குழாய் வழித்தடம் அமைக்கிறது. அதில், ராமநாதபுரம் – துாத்துக்குடி இடையிலான குழாய் வழித்தட பணி முடிந்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, இன்று (17ம் தேதி), நாகையில் அமைய உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு, அடிக்கல் நாட்டுகிறார். அதனுடன், துாத்துக்குடி – ராமநாதபுரம் குழாய் வழித்தடத்தையும், மணலியில், கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலையையும் துவக்கி வைக்கிறார்

dinamalar