‘மும்பையில் இருந்து வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்’

சென்னை : ”மும்பையில் இருந்து வருபவர்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப் படுவதுடன், அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்,” என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின், எட்டாம் ஆண்டு துவக்க விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குனர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஏழு ஆண்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன; 24 லட்சம் புறநோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், எட்டு இதய அறுவை சிகிச்சை, 45 கருவிகள் வாயிலாக, சிறுநீரக நோயாளிகளுக்கு, ‘டயாலிசிஸ்’ உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அண்டை மாநிலங்களில், பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, எல்லை மாவட்டங்களில், கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம்.
காய்ச்சல் என்றாலே, பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாதிப்பு இல்லை என்றாலும், ஓசூர் மற்றும் திருவள்ளூர், சித்துார் பகுதிகளில், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பலர், மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு சென்று வருபவர்களாக உள்ளனர். மும்பையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வருபவர்களை கண்காணிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்கள் அனைவருக்கும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில், கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில், பாதிப்பு யாருக்கு வந்தது; எப்படி வந்தது; ஒரே நிகழ்வில் பங்கேற்றவர்களா என கண்டறிந்து, நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்கிறோம்.

தென் மாவட்டங்களில், ஆங்காங்கே டெங்கு நோய் பரவ துவங்கியுள்ளது. தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் சிலருக்கு, டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறுவதற்கு, சுகாதார பணியாளர்களுக்கு, அரசு அறிவித்த முன்னுரிமை முடிவடைகிறது. ஆனாலும், முதியவர்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பிக்கும் வரை, சுகாதார பணியாளர் களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தமிழகத்தில், நான்கு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மேலும், எட்டு லட்சம் பேருக்கான, தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன. முன்கள பணியாளர்கள், விரைவில், தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்

dinamalar