‘சுகாதாரத் துறை மீது நம்பிக்கை அதிகரிப்பு’

புதுடில்லி:”கொரோனாவால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததால், நம் நாட்டின் சுகாதாரத்துறை மீது, சர்வதேச அளவில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

சுகாதாரத் துறைக்கு, 2021 – 22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பது தொடர்பாக நடந்த, ‘ஆன்லைன்’ கருத்தரங்கில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:உலகம் முழுதும் சுகாதாரத் துறைக்கு, கடந்த ஆண்டு, ‘அக்னி பரீட்சை’யாக அமைந்தது. கொரோனா பரவலை சமாளிக்க, சுகாதாரத் துறை கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.

முறியடிப்பு

நம் நாட்டில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட சவால்களை, சுகாதாரத்துறை, வெற்றிகரமாக சந்தித்து, முறியடித்துள்ளது.வளர்ச்சியடைந்த நாடுகளால் கூட, முடியாததை, நம் சுகாதாரத் துறை செய்து, சாதனை படைத்துள்ளது.கொரோனாவுக்கு எதிராக, நாம் தயாரித்துள்ள தடுப்பூசிகளுக்கு, சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு, சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது; இதை பூர்த்தி செய்ய, நாம் தயாராக இருக்க வேண்டும்.கொரோனா பரவல், சுகாதாரத் துறையின் வலிமையை பிரதிபலித்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில், நாம் சாதனை படைத்துள்ளோம்.

கூடுதல் நிதி

பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கு, முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க, அரசு கடமைப்பட்டுள்ளதை தான், இது காட்டுகிறது.மருத்துவச் சிகிச்சை மட்டுமின்றி, மக்களின் நலனுக்கும், சுகாதாரத் துறை, முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியாவை நலமிக்க நாடாக்க, அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நோய்களை தடுப்பது, உடல் நலத்தை மேம்படுத்துவது, ஏழைகளுக்கு மிக குறைந்த செலவில், மருத்துவச் சிகிச்சை கிடைப்பது, மருத்துவச் சிகிச்சைக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என, நான்கு முனைகளில், அரசு செயல்பட்டு வருகிறது இவ்வாறு, பிரதமர் பேசினார்.

dinamalar