மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை, 100 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி, மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியில் துவக்கி வைத்தார்.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது அந்த நீர் 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்து சென்று நிரப்பும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். பின்னர் இந்தத் திட்டத்திற்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது அணையின் இடது கரையில் இருந்து உபரி நீர் கால்வாய்கள் மூலம் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் .
பின்னர் அங்கிருந்து 940 குதிரை திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து குழாய்கள் வழியாக வினாடிக்கு 126 கன அடி வீதம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம். காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் பிறகு அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
இந்த திட்டத்திற்காக வெள்ளாளபுரம் ஏரியில் துணை நீரேற்று நிலையம் மற்றும்
கண்ணந்தேரியில் துணை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை இன்று காலை மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியில் முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார்.இந்த திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில்8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள12 பொதுப்பணித்துறை ஏரிகள் மற்றும் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளில் நீர் நிரப்பப்பட உள்ளது.
மொத்தம் 4 ஆயிரத்து 238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். இந்த திட்டத்திற்காக திப்பம்பட்டியில் இருந்து எம். காளிப்பட்டி ஏரி வரை 12 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது. திப்பம்பட்டியில் மிக பிரம்மாண்ட நீரேற்று நிலையங்களும் அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.மேலும் 5 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு வைத்தார்.ரூ. 62 கோடியே 63 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
இதன் பிறகு முதல்வர் பழனிசாமி பேசியதாவது: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஏப்.,1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
வறட்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.2,747 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் புயல் மற்றும் வறட்சி தொடர் மழையால் பாதிக்கப்பட்ட போது பயிர் கடன் ரூ.12,110 கோடி ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதிமுக அரசு, 5 ஆண்டுகளில் 2 முறை பயிர் கடன் ரத்து செய்து சாதனை படைத்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
malaimalar