2-வது கட்டமாக 60 வயதை கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஊசி போடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 2-வது கட்ட தடுப்பூசி போடும்பணி இன்று நாடு முழுவதும் தொடங்கியது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஊசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் 11 ஆயிரம் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 10 ஆயிரத்து 687 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஊசி போடும் பணி இன்று தொடங்கியது.
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முதல் ஆளாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த நர்சு நிவேதா ஊசி போட்டார். அவருக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
நமது விஞ்ஞானிகளும், டாக்டர்களும் விரைவாக செயல்பட்டு கொரோனாவை உலகளவில் எதிர்த்து போராட குறிப்பிட்ட சக்தியை உருவாக்கி இருக்கிறார்கள்.
தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரைப்போல பல மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், முக்கிய அதிகாரிகள் இன்று தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.
நாடு முழுவதும் இன்று காலை 9 மணியில் இருந்து 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஊசி போட்டுக் கொள்பவர்கள் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக www.cowin.gov.in என்ற இணையத்தில் உள்ள Co.Win.2.0 என்ற போர்ட்டலில் பதிவு செய்யலாம். மேலும் ஆரோக்கிய சேது இணைய தள செயலியிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
சுயமாகவே இணைய தளத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ள முடியும்.மேலும் நேரடியாக மையத்துக்கு சென்றும் பதிவு செய்யலாம். அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரை பதிவு செய்ய முடியும்.
அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக ஊசி போடப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் ஊசி போடுவதற்கு ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ரூ.150 ஊசி மருந்து செலவாகவும், ரூ.100 ஊசி போடுவதற்கான செலவாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.
ஊசி போட வருபவர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது போட்டோவுடன் கூடிய வேறு ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
பிரதமரின் ஜன ஆரோக்கிய யோஜனா மற்ற மத்திய அரசு சுகாதார திட்டங்கள், மாநில அரசின் இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலமாகவும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஊசி போட்டுக் கொள்ளலாம்.
ஊசி போடும் மையங்களை தாங்களாகவே தேர்வு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.
ஊசி போடும் தேதியை தேர்வு செய்து விட்டு அன்று போக முடியவில்லை என்றால் கூட வேறு தேதியை மாற்றிக் கொள்ளலாம்.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊசி போடுவதற்கு அவர்களுக்கு குறிப்பிட்ட நோய் இருக்கிறது என்பதை கூறி பதிவு பெற்ற டாக்டர் சான்றிதழ் கொடுக்க வேண்டும். 20 வகையான நோய்களில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்கள் அதை குறிப்பிட்டு ஊசி போட்டுக் கொள்ளலாம். முதல் ஊசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த 28 நாட்கள் கழித்து 2-வது ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலும் இன்று ஊசி போடும் பணிஅனைத்து பகுதிகளிலும் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 1,290 ஆஸ்பத்திரிகளில் ஊசி போடப்படுகிறது. இதில் 529 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 761 தனியார் ஆஸ்பத்திரிகளாகும்.
இன்று காலையில் இருந்தே பெரும்பாலான மையங்களில் மக்கள் ஆர்வத்துடன் சென்று ஊசி போட்டுக் கொண்டனர்.