கொரோனா தடுப்பூசி
அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் ஏற்கனவே முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அடுத்ததாக பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
நேற்று 2வது நாளாக தடுப்பூசி போடும் பணி நடந்தது. நேற்று மட்டும் 6 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் மத்திய அரசு வெளியிட்டுள்ள செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு 50 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
நாடுமுழுவதும் 27 ஆயிரம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதில் 12 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் அடங்கும். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அலை மோதியது.
அதிகம் பேர் பதிவு செய்ததால் அவர்களுக்கு ஒரே நாளில் ஊசி போட ஆஸ்பத்திரிகளில் போதிய வசதிகள் இல்லை. எனவே பல ஆஸ்பத்திரிகளில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டன.
எனவே இது பற்றி நேற்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். மாநில அரசு சுகாதார அதிகாரிகளுடனும் அவர்கள் கலந்துரையாடினார்கள்.
அப்போது அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் ஊசி போட அனுமதி அளிப்பது என்று முடிவு எடுத்தனர்.
இதற்கு முன்பு பிரதமர் ஆரோக்கிய யோஜனா திட்டம், மத்திய சுகாதாரத் திட்டங்கள், மாநில அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களை செயல்படுத்தும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கே தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இப்போது தடுப்பூசி போட வசதி கொண்ட அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் அனுமதி அளிக்க உள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
எனவே அனைத்து மாநிலங்களிலும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதலாக அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் அரசு ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தும் படி மத்திய அரசு கூறியிருக்கிறது.
மருந்துகளை ஆங்காங்கே இருப்பு வைத்து அவற்றை தடுப்பூசி மையங்களுக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாக உள்ளது. எனவே அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யும் படியும் மத்திய அரசு வற்புறுத்தியிருக்கிறது.
நாடுமுழுவதும் 60 இடங்களில் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு இருப்பில் வைத்துள்ளது. அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
maalaimalar