திறமையான இளைஞர்களுக்கு விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன – பிரதமர் மோடி தகவல்

விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று இணையவழியில் பேசினார்.

அவர் பேசியதாவது:- பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கல்வி, திறன், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வியை வேலைவாய்ப்பு சார்ந்ததாக மாற்ற பட்ஜெட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளின் பலனாக, விஞ்ஞான பதிப்புகளில் உலகின் 3 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

அறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு எல்லைகளை வரையறுப்பது மிகப்பெரிய அநீதி ஆகும். இந்த சிந்தனையுடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு கதவு திறந்திருக்கிறது.

சுயசார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களிடையே நம்பிக்கை நிலவுவது முக்கியம். தங்களது கல்வியிலும், அறிவிலும் முழு நம்பிக்கை வைக்கும்போதுதான் நம்பிக்கை பிறக்கும்.

புதிய தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. எனவே, உலகம் முழுவதும் உள்ள சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளில் கொண்டு வருவது ஒவ்வொரு மொழியிலும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் பொறுப்பாகும்.

தற்போதைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியமானதுதான்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

dailythanthi