7,500 இடங்களில் மலிவு விலை மருந்து கடை திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி

மலிவு விலை மருந்து கடைகளில் தரமான மருந்துகளை மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். மார்க்கெட் விலையை விட 50 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கும்.

புதுடெல்லி: இப்போது ஒவ்வொரு தெருக்களிலும் மளிகைக் கடைக்கு இணையாக மருந்து கடைகளும் காணப்படுகின்றன.

அந்த அளவுக்கு மக்கள் நோய்வாய்ப்பட்டு மருந்து கடைகளை தேடி செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் சாதாரண மருந்து கூட பல மடங்கு விலையை உயர்த்தி வைத்து விற்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் மருந்துக்காகவே தனியாக அதிகளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களுக்கு மலிவு விலையில் மருந்து வழங்கும் ‘ஜன அவ்ஷாதி’ (வெகுஜன மருந்து) திட்டத்தை பிரதமர் மோடி ஏற்கனவே தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் 84 இடங்களில் மருந்து கடைகள் அமைக்கப்பட்டன.

இதை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் வகையில் 7,500 மருந்து கடைகளை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன்படி இந்த கடைகளில் தரமான மருந்துகளை மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். மார்க்கெட் விலையை விட 50 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கும்.

கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை (இன்று) வெகுஜன மருந்து வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

malaimalar