கொரோனா வைரஸ் பரிசோதனை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின்படி இதுவரை 22.42 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 7,78,416 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல் வேகமாக பரவத் தொடங்கியது.
நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோரை பாதித்த இந்த வைரசின் பிடியில் சிக்கி தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
ஊரடங்கு, பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரவல் வேகம் உலகில் எங்கும் இல்லாத வகையில் உச்சத்துக்கு சென்றது. அப்போது கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கியதோடு ஒரு நாள் பலி ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.
எனினும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட அதிக அளவிலான பரிசோதனைகளின் பயனாக பரவல் வேகம் கட்டுக்குள் வந்தது. படிப்படியாக பாதிப்பு, பலி எண்ணிக்கை குறைந்தது.
கடந்த மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. மேலும் ஒரு நாள் பலியும் 100-க்கும் கீழ் சரிந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரம் வரை இருந்த நிலையில் நேற்று 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் ஒரேநாளில் பாதிப்பு சுமார் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,12,85,561 ஆக உயர்ந்தது.
கடந்த டிசம்பர் 24-ந் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 23 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று இந்த ஆண்டில் புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது.
நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 13,659 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு அக்டோபர் 7-ந் தேதிக்கு பிறகு நேற்று தான் தினசரி பாதிப்பு மீண்டும் 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதேபோல கேரளாவில் 2,475 பேருக்கும், பஞ்சாபில் புதிதாக 1,393 பேருக்கும் தொற்று உறுதியானது. பஞ்சாபில் செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பாக நேற்று அமைந்துள்ளது.
கர்நாடகாவில் 760, குஜராத்தில் 675, தமிழ்நாட்டில் 671, மத்திய பிரதேசத்தில் 516, சத்தீஸ்கரில் 456, டெல்லியில் 370 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மகாராஷ்டிராவில் 22,52,057, கேரளாவில் 10,83,530, கர்நாடகாவில் 9,56,801, ஆந்திராவில் 8,91,004, தமிழ்நாட்டில் 8,56,917, டெல்லியில் 6,42,030, உத்தரபிரதேசத்தில் 6,04,648, மேற்கு வங்கத்தில் 5,77,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் 54 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 126 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,58,189 ஆக உயர்ந்தது.
இதில் மகாராஷ்டிராவில் 52,610, கேரளாவில் 4,342, கர்நாடகாவில் 12,379, ஆந்திராவில் 7,177, தமிழ்நாட்டில் 12,530, டெல்லியில் 10,931, உத்தரபிரதேசத்தில் 8,740, மேற்கு வங்கத்தில் 10,283, ராஜஸ்தானில் 2,789, சத்தீஸ்கரில் 3,872, குஜராத்தில் 4,418, அரியானாவில் 3,064, மத்திய பிரதேசத்தில் 3,877, பஞ்சாபில் 5,978 பேர் இறந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரேநாளில் 18,100 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,09,38,146 ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் 1,89,226 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 1,00,240 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின்படி இதுவரை 22.42 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று மட்டும் 7,78,416 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
malaimalar