மம்தா
சதிகளால் என்னை தடுத்து நிறுத்த முடியாது; பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார்.
ஜால்டா: மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தபிறகு நடைபெற்ற சம்பவத்தில் காயமடைந்தார்.அது பா.ஜ.க. செய்த சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறினாலும், தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் மற்றும் மாநில அரசின் அறிக்கைகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அச்சம்பவம் பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்டது என்று கூறிவிட்டது.
இந்நிலையில், அந்த சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக, புருலியா மாவட்டம் ஜால்டாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:-
‘சதிகளால் என்னை தடுத்து நிறுத்த முடியாது. எனது குரலும், இதயமும் செயல்படும் வரை நான் பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.
சில நாட்கள் பொறுத்திருங்கள், எனது கால்கள் குணமாகிவிடும். அதன்பிறகு உங்கள் கால்கள் (யார் என்று குறிப்பிடவில்லை) வங்காள மண்ணில் சுதந்திரமாக நடமாடுகிறதா என்று பார்க்கிறேன்.
சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. அதன் பல தலைவர்களுடன் டெல்லியில் இருந்து வந்துள்ளது. ஆனால் வங்காளம் அவர்களுக்கு கிடைக்காது.
மேற்கு வங்காளத்தில் கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் செய்த மேம்பாட்டு மற்றும் நலத்திட்டப்பணிகளைப் போல உலகத்திலேயே எந்த அரசும் செய்யவில்லை. பா.ஜ.க.வின் பிரதமரால் நாட்டை நடத்த முடியவில்லை. அவர் முற்றிலும் திறமையற்றவர்.’
இவ்வாறு அவர் கூறினார்.