மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் – பிரதமர் மோடி பேச்சு

மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் – பிரதமர் மோடி பேச்சு

மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கொல்கத்தா, 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கண்டி பகுதியில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மே 2-ம் தேதி மம்தா பானர்ஜி வெளியேறுவார். உண்மையான மாற்றம் மேற்குவங்காளம் முழுவதும் கேட்கும். மம்தா உங்கள் விளையாட்டு என்ன என்பது மேற்குவங்காளத்தில் உள்ள குழந்தைகள் கூட புரிந்துகொண்டுள்ளது. ஆகையால், மே 2-ம் தேதி மேற்குவங்காளம் மம்தா வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை தண்டிக்க நமது தாய்மார்களும், சகோதரிகளும் மிகப்பெரிய அளவில் முன்வந்துள்ளனர். அம்பன் புயலால் பாதிப்பு, திரிணாமுல் காங்கிரசால் கொள்ளை என பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மம்தா பானர்ஜியால் பதில் செல்லமுடியவில்லை. மத்திய அரசால் அளிக்கப்பட்ட நிவாரணம் மருமகனிடம் (மம்தாவின் மருமகன்) சிக்கிக்கொண்டது.

மம்தா, அம்பன் புயல் நிவாரணத்தை கொள்ளையடித்தது யார் என வங்காள தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏன் இன்னும் உடைந்த கூரை வீடுகளில் வசிக்கின்றனர். தேவை ஏற்பட்டபோது மம்தா எங்கு இருந்தார் என தெரியவில்லை. ஆனால், தேர்தல் வந்த உடன் அரசாங்கம் உங்கள் வீட்டின் முன் உள்ளது என்று அவர் கூறுகிறார். இது திரிணாமுல் காங்கிரசின் விளையாட்டு. அதை மேற்குவங்காளத்தில் உள்ள குழந்தையும் புரிந்துகொண்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரசின் விளையாட்டு முடிவடைந்து, வளர்ச்சி தொடங்கும். மேற்குவங்காளத்தின் வளர்ச்சியில் பாஜக உறுதியாக உள்ளது.மேற்குவங்காள மக்களின் எதிர்க்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். மேற்குவங்காளம் பாஜக அரசை விரும்புகிறது. வந்தே மாதரத்தின் ஆத்மா மேற்குவங்காளத்தை இந்தியாவுடன் பிணைத்துள்ளது. ஆனால், மம்தா இங்கு வெளியாட்கள் என்று பேசுகிறார். நாம் அனைவரும் இம்மண்ணின் குழந்தைகள், இந்தியர்கள் யாரும் இம்மண்ணில் வெளியாட்கள் இல்லை’ என்றார்.

dailythanthi