கையிருப்பு 10 நாளுக்கு தான் வரும்; கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு?

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ‘கையிருப்பு தடுப்பூசி 10 நாட்களுக்கு கை கொடுக்கும்; அதற்குள் கூடுதல் தடுப்பூசி வந்துவிடும்’ என சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்து 34 லட்சம் கோவிஷீல்டு; 5 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி என 39 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தன. இதில் 21 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வீணாகுவது மருத்துவ உலகில் தவிர்க்க இயலாத ஒன்று. அந்த வகையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதால் 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே தடுப்பூசி வீணாகி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த தடுப்பூசியை மாத ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்க முடியாது. அதற்கேற்ற சூழலில் சேமித்து வைப்பது மருத்துவ ரீதியில் ஏற்புடையது அல்ல. சில நாட்களில் மத்திய அரசிடமிருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. தடுப்பூசி போடும் பணி எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து நடைபெறும், என்றார்.

dinamalar