சவால்கள் நிறைந்த கொரோனா காலத்தில் இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்துகொண்டது

சவால்கள் நிறைந்த கொரோனா காலத்தில் இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது என்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

புதுடெல்லி, டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா காலகட்டத்தில் நாடு அந்த வைரஸ் சவாலை மட்டுமே எதிர்கொள்ளவில்லை. மற்ற சவால்களையும் எதிர்கொண்டது.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம், புயல்கள், நில நடுக்கங்கள், பிறகு வெட்டுக்கிளிகளின் திரள் தாக்குதல் என பல சவால்கள் அணிவகுத்தன. நான் இந்த சவால்களை மகிழ்ச்சியுடனே எதிர்கொண்டேன். அவற்றை நாடு கடந்தும் வந்துள்ளது.

இந்த சவால்களுக்கு அப்பாலும், நாடு வலுவாக வெளிப்பட்டுள்ளது. இந்தியாவின் முழுத்திறனையும் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டது.

‘எம்.பி.க்கள் தவறாமல் சபைக்கு வாருங்கள்’

நான் 2 தசாப்தங்களுக்கு மேலாக (20 வருடங்களுக்கு மேலாக) பொதுவாழ்வில், அரசுப்பணியில் உள்ளேன். முதலில் ஒரு மாநிலத்தின் (குஜராத்) முதல்-மந்திரியாக இருந்தேன். இப்போது பிரதமராக உள்ளேன். ஒரு நாள்கூட நான் விடுமுறை எடுத்துக்கொண்டதில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபைகளுக்கு தவறாமல் வரவேண்டியது அவசியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் விளக்கம்

இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் பற்றிய ஒரு விளக்கத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். “கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கத்துக்கு மத்தியிலும், பொதுமக்கள் மீது கூடுதலாக எந்த வரியையும் விதிக்கவில்லை. அனைத்து தரப்பினருக்குமான முழுமையான பட்ஜெட்டாக அது அமைந்தது” என குறிப்பிட்டார்.

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் இந்தக் கூட்டத்தில் பேசினார். அவர், “கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்தியாவின் அந்தஸ்து, நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளாலும், பின்னர் தடுப்பூசிகளாலும் உலகளவில் உயர்ந்தது” என குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்தது தொடர்பான வந்தே பாரத் திட்டம் பற்றியும் ஜெய்சங்கர் பகிர்ந்து கொண்டார்.

dailythanthi