உள்நாட்டு தேவைகளுக்கு பிறகே தடுப்பூசி ஏற்றுமதி: அரசு முடிவு

புதுடில்லி: கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால், உள்நாட்டு தேவைகள் பூர்த்தியான பிறகே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா 6 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை 76 நாடுகளுக்கு விநியோகித்துள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை கோவிஷீல்டு தடுப்பு மருந்தாகும். அதில் 85 லட்சம் தடுப்பு மருந்துகள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. பிற மருந்துகள் வணிக ரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடைசியாக மார்ச் 18 அன்று நமீபியா மற்றும் பொலிவியா நாட்டிற்கு இந்தியா தடுப்பு மருந்துகளை அனுப்பியுள்ளது. அதன் பின்னர் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி எதுவும் நிகழவில்லை.

இந்நிலையில் உள்நாட்டு கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளனர். இதனால் உள்நாட்டில் தேவை அதிகரித்துள்ளது. அதற்கு முன்னுரிமை வழங்கி ஏற்றுமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஏற்றுமதி தொடர்பான நிலைமையை அரசாங்கம் ஆய்வு செய்யும் என்கின்றனர்.

இதுவரை இந்தியாவில் 5.1 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 4.7 கோடி பேர் கோவிஷீல்டு பெற்றுள்ளனர். சீரம் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு உற்பத்தியை ஏப்ரல் மாதத்திற்குள் 7 கோடியிலிருந்து 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு இவ்வாரம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய சுகாதார அமைச்சக செயலரிடம் அனுமதி கேட்டுள்ளது. இதனால் உள்நாட்டு தடுப்பூசி திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும், அஸ்ட்ராசெனகா நிறுவனம் தொழில்நுட்பத்தை பகிர்ந்துள்ளதால் அவர்களை முதன்மை வாடிக்கையாளர்களாக கருத வேண்டும் என உரிம ஒப்பந்தம் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

dinamalar