இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,446- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலை மாறியது. ஒரே நாளில் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால் 30-ந்தேதியும், 31-ந்தேதியும் தொடர்ந்து 2 நாட்களாக கொரோனா பரவல் இறங்குமுகம் கண்டது. நேற்று முன்தினம் பாதிப்பு அதிரடியாக 56 ஆயிரத்து 211 ஆக குறைந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 72 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், இதை எல்லாம் மிஞ்சும் வகையில் இன்று ஒருநாள் பாதிப்பு 81,446- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 469- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 50 ஆயிரத்து 356-பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தத் தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இப்படி எகிறி இருப்பது அதிர வைப்பதாக அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 11-ந்தேதிக்கு பிறகு இதுவே அதிகபட்ச பாதிப்பு என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,23,03,131- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,15,25,039- ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 696-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 396- ஆக உள்ளது.
dailythanthi