கொரோனா விதிகளை மதிக்காமல் மும்பை காய்கறி சந்தையில் குவியும் மக்கள்..!!

மும்பையின் தாதர் காய்கறி சந்தையில், இன்று காலை கொரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்க விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மும்பை, மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு எட்டி வருகிறது.  மும்பையில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 8,646- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மராட்டிய மாநில அரசு உத்தேசித்து வருகிறது. ஆனால், அரசின் இந்த திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் கொரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தலைநகர் மும்பையின் தாதர் காய்கறி சந்தையில், இன்று காலை கொரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்க விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dailythanthi