18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி- பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை

பிரதமர் மோடி

தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கையில் இருந்தால் தான் அவர்களை பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி- பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய் பரவல் 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

இந்தநிலையில் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

கொரோனா நோய் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் அதை கட்டுப்படுத்த 2 வழிகள்தான் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் தான் கொரோனா நோய் மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தற்போதுவரை 7 கோடியே 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 6 கோடியே 81 லட்சம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 1 கோடியே 5 லட்சம் பேருக்கு 2-வது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன.

2-வது அலை நோய் பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தடுப்பூசி போடுவதை போர்க்கால அடிப்படையில் இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

தற்போது 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும்.

தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கையில் இருந்தால் தான் அவர்களை பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும். ரே‌ஷன் பொருட்கள் வாங்குவதற்கும் இந்த சான்றிதழை கட்டாயமாக்க வேண்டும்.

தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்கு இன்னும் பல ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள், குடும்ப ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் ஊசி போடுவதை தாராளமாக அனுமதிக்க வேண்டும். இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். முகாம்கள் அமைத்தும் ஊசி போடலாம்.

மாவட்ட அளவில் தனியாக தடுப்பூசி குழு அமைக்க வேண்டும். இதில் பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்புகளும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். குறுகிய நேரத்திற்கு கண்டிப்பாக பொது முடக்கத்தை செயல்படுத்த வேண்டும். சினிமா தியேட்டர்கள், கலாசார கூடங்கள், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றை தடுக்கலாம்.

அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மராட்டியத்தில் நிலைமை மோசமாகி உள்ளதால், சில இடங்களில் சிறிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இரவு நேர பொது முடக்கம் அறிவிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மத்திய கொரோனா கட்டுப்பாட்டு குழு உறுப்பினரும் எய்ம்ஸ் டைரக்டருமான டாக்டர் ரன்தீப் குலேரியா கூறும்போது, ‘‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் இப்போது ஒரேவழி. இந்த ஊசி போட்டாலும் கூட வைரஸ் தொற்று உடலில் இருக்கும். ஆனால் அதன் தாக்கம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. ஊசி போடவில்லை என்றால் அவர்கள் அபாயகட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிடும்.

பலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் நோய் தாக்குகிறது. எனவே கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

maalaimalar