விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்

கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2-வது மகன் பிரசாந்த்.

இவர் மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பி.எஸ்சி. தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத் துறை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.

பிரசாந்த் பதக்கங்களை பெற்றதும் அவரது தாய் வசந்தாவும், தாத்தா சென்னேகவுடாவும் மேடையில் ஏறி அவருக்கு முத்தமழை பொழிந்தனர். மேலும் ஆனந்த கண்ணீரில் திளைத்தனர். பிரசாந்தின் தந்தைக்கு வங்கியில் ரூ.2.40 லட்சம் கடன் உள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், எனது குடும்பம் விவசாய குடும்பம். அதனால் விவசாயத்தின் மீது எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் வந்தது. இதனால் விவசாயத்தில் சாதிக்க விரும்பினேன். விவசாயத்தில் பலரும் பாரம்பரியமாக ஒரே பயிரை சாகுபடி செய்து வருகிறார்கள். இது பல சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாய விஞ்ஞானியாக மாறுவதே எனது குறிக்கோள். அத்துடன் எனது படிப்புக்காக எனது பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பேன் என்றார்.

maalaimalar