தமிழகம், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட் 19, சென்னை மாநகராட்சி, அபராதம், மாஸ்க், முககவசம்,
சென்னை: சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.200ம், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடம் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றால், பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கூடுதல் பஸ்கள்
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க இந் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அபராதம்
அதேபோல், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.200ம், பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், எச்சில் துப்பினாலும் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.அதேபோல், மதுரையிலும் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா
கோவை கருப்பண்ண வீதி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து அங்கு மொத்தமுள்ள 16 வீடுகளில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது , மேலும் கருப்பண்ண வீதி பகுதியில் அதிக கூட்டம் காணப்படுவதால் அந்த வீதியை மூட மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
மேலும் 115 பேருக்கு தொற்று
திருநெல்வேலியில் இன்று(ஏப்.,09) புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதிகளில் மட்டும் 57 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 58 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 661 வீடு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
maalaimalar