மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை பெருகி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்க, அதைப் பயன்படுத்துவதில் கவனமாக இருப்பதுடன், அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார்.

இருப்பினும் இதற்கு மத்தியில் மராட்டிய மாநிலம், நாலசோப்ராவில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 கோரோனா நோயாளிகள் கடந்த சில தினங்களுக்கு முன் பலியாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்சிஜன்

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் 6 நோயாளிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாகி உள்ள தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய பிரதேச மாநிலம், ஷாடோல் நகரில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா பராமரிப்பு தீவிர சிகிச்சை வார்டில் 62 நோயாளிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 6 பேர் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன்பற்றாக்குறையால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதை அந்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் மிலிந்த் சிரால்கர் உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஷாடோல் நகர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் மிலிந்த் சிரால்கர் கூறியதாவது:-

6 நோயாளிகள் திரவ ஆக்சிஜனின் குறைந்த அழுத்தம் காரணமாக இறந்தனர். இது தொடர்பாக நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணங்கள் கண்டறியப்படும்.

எங்கள் ஆஸ்பத்திரிக்கு திரவ ஆக்சிஜன் வினியோகம் நேற்று மாலை (நேற்று முன்தினம் மாலை) நின்று விட்டது. வினியோகஸ்தர்களை தொடர்பு கொண்டோம். ஆனால் ஆக்சிஜன் வாகனம் இரவு நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் ஆலையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே இருப்பு வைக்க முடியும். பிற மாநிலங்களில் இருந்துதான் திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

எங்கள் ஆஸ்பத்திரியில் 62 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவற்றில் கொரோனாவின் தீவிர பாதிப்பில் உள்ள நோயாளிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலியாகி இருப்பதை முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் சாடி உள்ளார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலியாகி இருக்கும் வேதனையான தகவல் ஷாடோலில் இருந்து வந்துள்ளது. போபால், இந்தூர், உஜ்ஜைனி, சாகர், ஜபல்பர், காண்ட்வா, கார்சோன் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்ந்தும்கூட அரசு ஏன் விழித்துக்கொள்ளவில்லை? நிலைமை அச்சம் தருவதாக உள்ளது. கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் ஊசிகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த மருந்தும் சரி, ஆக்சிஜனும் சரி இருப்பு உள்ளதாக காகிதத்தில்தான் உள்ளது. உண்மையில் இல்லை” என கூறி உள்ளார்.

maalaimalar