தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரெயில்வே ஊழியர் பாராட்டு குவிகிறது

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் தண்டவாளத்தில் விழுந்த 6 வயது சிறுவனை காப்பாற்றிய நிஜ ஹீரோவான ரெயில்வே ஊழியருக்கு பாராட்டு குவிகிறது.

மும்பை, மராட்டிய தலைநகர் மும்பை அருகே வாங்கனி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சங்கீதா என்ற பார்வையிழந்த பெண் தனது குழந்தைகளுடன் நடந்து சென்றார். அப்போது அவரது 6 வயது மகன் பிளாட்பாரத்தில் இருந்து தவறி விழுந்தான்.

அந்த நேரத்தில் தண்டவாளத்தில் வேகமாக ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சத்தம் மூலம் ரெயில் வருவதை தெரிந்து கொண்ட தாய் தனது மகனை காப்பாற்ற செய்வது அறியாது திகைத்து நின்றாா். அவர் கையை நீட்டிக்கொண்டு மகனை ஏறி வந்துவிடு என அலறி கொண்டு இருந்தார்.

காப்பாற்றினார்

அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக தூரத்தில் இருந்து ஓடி வந்தார், ரெயில்வே ஊழியரான பாயின்ட்ஸ் மேன் மயூர் செல்கே. அவர் ரெயிலின் வேகத்தை ஈடுகட்டும் வகையில் ஓடி கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை தூக்கி பிளாட்பாரத்தில் போட்டு அவரும் மேலே ஏறினார். அவர் பிளாட்பாரத்தில் ஏறிய அடுத்த வினாடியே மின்னல் வேகத்தில் ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்றது.

வழக்கமாக சினிமாக்களில் மட்டும் நடக்கும் இதுபோன்ற காட்சிகள், நிஜத்தில் நடந்து இருப்பது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து உள்ளது.

ரெயில்வே மந்திரி பாராட்டு

மேலும் இந்த காட்சிகள் ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் உள்ளிட்ட பலர் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனின் உயிரை காப்பாற்றிய நிஜ சூப்பர் ஹீரோவான ரெயில்வே ஊழியரை பாராட்டி வருகின்றனர்.

ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், ‘‘உங்களை நினைத்து பெருமை அடைகிறேன் மயூர் செல்கே. மும்பையில் உள்ள வாங்கனி ரெயில் நிலையத்தில் உயிரை பணயம் வைத்து குழந்தையின் உயிரை காப்பாற்றி விவரிக்க முடியாத அளவிலான வீர செயலை செய்து உள்ளீர்கள்’’ என கூறியுள்ளார்.

maalaimalar