கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுங்கள்-யூரியா தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்

கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி, கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளன. எனவே இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று 10 மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.

இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்தார். அத்துடன் யூரியா தயாரிப்பு நிறுவனங்கள் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

முன்னதாக கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக, உரத்தயாரிப்பு கூட்டுறவு நிறுவனமான இப்கோ, தங்கள் நிறுவனங்களில் அடுத்த 15 நாட்களில் ரூ.30 கோடி மதிப்பில் 4 ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவு செய்திருந்தது.இதைச்சுட்டிக்காட்டி இருந்த சதானந்த கவுடா, இப்கோவின் நடவடிக்கையை பின்பற்றி யூரியா உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் வளாகங்களில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

dailythanthi