திமுக, ஸ்டாலின்
சென்னை : முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், எந்த திட்டத்தை செயல்படுத்த, முதல் கையெழுத்திடுவார் என்ற, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகை; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடைகளில், ஜூன், 3ம் தேதி, 4,000 ரூபாய் உதவித்தொகை. காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; எரிபொருள் விலை, 5 ரூபாய் வரை குறைப்பு; ஆவின் பால் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பு; அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச அனுமதி உள்ளிட்ட, பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றன.
இதுமட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதியிலும், பொது மக்களிடம் புகார் மனுக்களை ஸ்டாலின் வாங்கினார். ஆட்சி பொறுப்பேற்ற, 100 நாட்களில், இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியையும், ஸ்டாலின் அளித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும், 7ம் தேதி, முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். அதன்பின், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் அறைக்கு சென்று, பணிகளை துவங்கவுள்ளார்.
அப்போது, தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி, எந்த திட்டத்தை செயல்படுத்த, அவர் முதல் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை, இலவச பஸ் பயண அனுமதி ஆகிய திட்டத்தை செயல்படுத்த, அவர் முதல் கையெழுத்திட, அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
dinamalar