நியூயார்க் : ‘காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியானமுறையில், சுமுக தீர்வு காண வேண்டும்’ என, ஐ.நா., சபை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா., எனப்படும், ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் வோல்கன் போஸ்கிர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூறியதாவது:காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில், சுமுக தீர்வு காண வேண்டும் என்ற, ஐ.நா., சபையின் நிலையில் மாற்றமில்லை.ஐ.நா., கோட்பாடுகளுக்கு உட்பட்டு, காஷ்மீர் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண, இந்தியா – பாகிஸ்தான் இடையே, 1972ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா, பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பூட்டோ ஆகியோர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், காஷ்மீர் விவகாரத்தில், மூன்றாவது நாடு தலையிடுவதையும் தடுக்கிறது.அதனால், சிம்லா ஒப்பந்தப்படி, காஷ்மீர் பிரச்னைக்கு, அமைதி தீர்வு காண, இந்தியாவும், பாகிஸ்தானும் முயற்சிக்க வேண்டும்.வங்கதேசம், பாகிஸ்தான் அழைப்பை ஏற்று, இம்மாதத்தில் அந்நாடுகளுக்கு செல்ல உள்ளேன். காஷ்மீர் பிரச்னை தீர்வு காண, பாகிஸ்தானிலும், இப்போது சொல்வதை தான் தெரிவிப்பேன்.இந்தியாவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தேன். கொரோனா பரவலால், இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
maalaimalar