இந்திய விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை: யு.ஏ.இ அறிவிப்பு

துபாய்: கோவிட் தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஏப்ரல் 24 முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கோவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar