இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
புதுடெல்லி, இந்தியாவில் தினந்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு, இப்போது நாள்தோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன.
நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 364 ஆக இருந்தது. நேற்று 1 லட்சத்து 20 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 460- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 89 ஆயிரத்து 232-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 2,677 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 09 ஆயிரத்து 339- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2 கோடியே 69 லட்சத்து 84 ஆயிரத்து 781- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்து 759- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 77 ஆயிரத்து 799 ஆக உள்ளது.
dailythanthi