வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு; பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு; 10 ஆண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் சுறுசுறுப்பு

சென்னை: ரூ.300 கோடி மதிப்பிலான வடபழநி முருகன் கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி உத்தரவால் தூங்கி கொண்டிருந்த அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இந்து கோயில்களின் சொத்துக்கள் சில அந்தஸ்து பெற்ற நபர்களிடம் சிக்கி தவிக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் அதி தீவிர நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருக்கும். கோயில் நிலம் மீட்பது தொடர்பாக கோயில் ஊழியர்கள், நிர்வாகத்தினர், பக்தர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர். அடுக்கடுக்கான புகார்கள் அனுப்பினர். நிர்வாக காரணம் சொல்லி ஆளும் கட்சியினர் சிலரிடம் கூட்டு சேர்ந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஏன் இந்த நடவடிக்கை இப்போது ?

பல ஆண்டுகளாக கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை கவனமாக கேட்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சேகர் பாபுவுக்கு அதிரடி உத்தரவிட்டார். இதனையடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் களம் இறங்கினர். இதன் முதல்படியாக வட பழநி கோயிலின் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது ; தனியார் சம்பாதிப்பதை கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை தடுக்க காவல் துறை, மாநகராட்சி, அறநிலைய துறை இணைந்து இன்று வடபழநி கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். சாலிகிராமம் மற்றும் சுற்று பகுதிகளில் வணிக நிறுவனங்கள், வாகன காப்பகங்கள், மற்றும் குடோன்கள் என பலரது வசமிருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கள் நிலம் மதிப்பு ரூ.300 கோடி ஆகும். இது டிரெய்லர் தான் இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள்.

எங்கள் துறையில் இந்து கோயில்கள் பொறுத்தவரையில் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம். எந்த கோயில்களில் எல்லாம் வருமானம் உள்ளதோ , அது யார் பிடியில் ஆக்கிரமிப்பு இருந்தாலும் அங்குள்ள தடைகளை உடைத்து திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்படும்.

மேலும் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

பக்தர்கள் வேண்டுகோள்:

இது போன்ற ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகளை கண்டறிந்து இந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். வட பழநி கோயிலுக்கு சொந்தமான இந்த இடம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வந்தன. கோயில் தொடர்பாக அறநிலைய துறையிடம் கேட்டபோது நிர்வாக ரீதியாக காரணம் கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர் . கடந்த ஆளும் கட்சி ஆட்களின் பிடியில் இருந்தததால் இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இது போல் இனியும் நடக்காமல் இருக்க இந்த ஆக்கிரமிப்புக்கு காரணம் யார் என அறிந்து தற்போதைய அமைச்சரும், கமிஷனர் குமரகுருபரனும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்போதுதான் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க முடியும்.

இபிஎஸ் நடவடிக்கை எடுப்பாரா ?

ஆக்கிரமிப்புக்கு துணைபோன அதிமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. வடபழநி கோயில் சொத்துக்கள் தொடர்பாக ஆக்கிரமிப்புக்கு காரணமாக இருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ.,வாக இருந்தாலும் கட்சியை விட்டு நீக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆட்களின் செயல்களால் தான் ஆட்சியை இழந்தோம் என உணர வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுப்பார்களா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

dinamalar