கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 20 குழுக்கள்: பல்வேறு ஊழியர்களுக்கும் பயிற்சி

கொரோனா வைரஸ்

கொரோனா 3-வது அலையும் உருவாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2-வது அலையை போலவே 3-வது அலையும் கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 20 குழுக்கள்: பல்வேறு ஊழியர்களுக்கும் பயிற்சி

புதுடெல்லி: கொரோனா 2-வது அலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெரும் தாக்குதலை நடத்தி விட்டது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும், கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டு விட்டன.

அது நடத்திய கோரத்தாக்குதலுக்கு பல மாநிலங்கள் தாக்குபிடிக்க முடியாமல் திணறின. ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு, சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள் தட்டுப்பாடு என பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

இந்தநிலையில் கொரோனா 3-வது அலையும் உருவாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2-வது அலையை போலவே 3-வது அலையும் கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது.

மத்திய அரசு

எனவே அவ்வாறு 3-வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் முன் கூட்டியே செய்து வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

3-வது அலை வந்தால் அதை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் 20 பயிற்சி குழுக்கள் அமைக்கப்படுகிறது. இதில் நிபுணர்கள், சிறப்பு டாக்டர்கள் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் கீழ் ஏராளமான மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள்.

அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் முன்கூட்டியே அளிக்கப்படும். நோய் பரவல் தொடங்கியதும் இந்த குழுக்கள் விரைவாக செயல்பட்டு தடுப்பு பணிகளை மேற்கொள்ளும். இதற்காக கூடுதலாக படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், தேவையான மருத்துவ சாதனங்கள் அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருக்கும்.

குழுவில் உள்ளவர்கள் விரைவாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். மருத்துவ பணியாளர்கள் தட்டுப்பாட்டை போக்குவதற்காக மருத்துவத் துறையில் உள்ள மற்ற நபர்களுக்கும் தடுப்பு நடவடிக்கை பயிற்சிகள் வழங்கப்படும்.

நர்சுகளுக்கு உதவியாக பணிபுரிய பல்வேறு தரப்பு சுகாதார பணியாளர்களுக்கு விசே‌ஷ பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழுவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட உள்ளன.

dinamalar