புதுடில்லி: குறைந்தபட்சம் ஒரு தவணை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு, கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க இண்டிகோ விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.
அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குத்தான் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தலைமை வருவாய்த் துறை அதிகாரி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளதாவது:
குறைந்தபட்சம் ஒரு தவணை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு, அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படும். இது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும். இச்சலுகையைப் பெறும் பயணிகள் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவர்கள் இந்தியாவுக்குள் இருக்க வேண்டும்.
இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பயணிகள், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையினால் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும்.
விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் சரிபார்ப்பு கவுன்ட்டரிலும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் தேவைப்பட்டால் அவற்றை காட்ட வேண்டும். ஆரோக்கிய சேது செயலி மூலமும் அதைக் காண்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
dinamalar