இந்த வேலையை சீக்கிரம் முடிங்க… அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி

ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3வது அலையின் தாக்கம் தென்படத் தொடங்கி உள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை, இருப்பு, உற்பத்தி ஆகியவை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். நாடு முழுவதும் 1500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட உள்ளன. பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வாங்கப்படும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அவை 4 லட்சம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் என பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள்

ஆக்சிஜன் ஆலைகள் நிறுவும் பணியை விரைவில் முடித்து, ஆலைகள் செயல்படுவதை உறுதி செய்யவேண்டும், இதற்காக மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.

ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதிய அளவு இருக்கிறார்களா? என பிரதமர் விசாரித்தார். மருத்துவமனை ஊழியர்களுக்கு போதிய பயிற்சியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் ஈடுபடுத்த வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, நாடு முழுவதிலும் 8000 பேருக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக பிரதமரிடம் அதிகாரிகள் கூறினர்.

கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்தபோது நாட்டில் பல பகுதிகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. தொழிற்துறை பயன்பாட்டிற்காக ஆக்சிஜனை மருத்துவமனைகளில் இருந்து தேவைக்கேற்ப ஆங்காங்கு திருப்பிட வேண்டியதிருந்தது. இதற்கு உதவுவதற்காக ரெயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா 3வது அலையின்போது தொற்று அதிகரித்தால் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளையை அதிகரிக்க வேண்டியிருக்கும். இதற்காக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களின் அருகில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து, சேமிப்பு மையங்களை உருவாக்க வேண்டும். இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

maalaimalar