கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி அறிவுரை

கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என 6 மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி, கொரோனா பரவலின் 2-வது அலை, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல், கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு என பல்வேறு சூழ்நிலைகளில் தமிழகம் சிக்கியது.

ஆனாலும் அதிலிருந்து தமிழகம் மீண்டதோடு, தற்போது படிப்படியாக தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 3-வது அலை வந்தாலும் அதை சந்திக்க தயார் என்ற நிலைக்கு தமிழகம் வந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் கவலையளிப்பதாக காணப்பட்ட 8 வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் 13-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மலைவாழிடங்கள், சந்தைகளில் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் பலர் இருப்பது கவலை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்கள் மற்றும் தொற்று பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களைக் கொண்ட மாநில முதல்-மந்திரிகளுடன் அவர் உரையாற்றினார்.

அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்-மந்திரிகளுடன் இன்று காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

கடந்த சில நாட்களாக 6 மாநிலங்களில் மட்டும் 80% கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும்.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட வேண்டும். கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்.  ‘டெஸ்ட்-ட்ராக்-ட்ரீட்-தடுப்பூசி’ அணுகுமுறையை மையமாகக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

கொரோனாவை எதிர்த்து போராட ரூ .23,000 கோடி அவசரகால நிதி தொகுப்பை இந்திய அரசு அறிவித்துள்ளது.

சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்த தொகுப்பிலிருந்து வரும் நிதியை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

dailythanthi