டெல்லியில் தடுப்பூசி மையமாக மாறிய நடமாடும் தியேட்டர்

டெல்லியில் ஒரு நடமாடும் தியேட்டர் தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.

புதுடெல்லி, நாட்டின் உட்புற பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் சினிமாவை கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், ‘பிக்சர்டைம் டிஜிபிளெக்ஸ்’ என்ற நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டு நடமாடும் தியேட்டர்களை தொடங்கியது. இவை ‘டூரிங் டாக்கீஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

கொரோனாவால் சினிமாவே நலிந்தபோதிலும், இந்த தியேட்டர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இயக்கப்பட்டன. இவற்றில், கடைசியாக இந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் ‘காகஸ்’ என்ற இந்திப்படம் திரையிடப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, மராட்டியம், டெல்லி, மத்தியபிரதேசம், அசாம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில நடமாடும் தியேட்டர்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அங்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்துள்ளதால், டெல்லியில் உள்ள ஒரு நடமாடும் தியேட்டர், தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது. 150 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த தியேட்டர், கடந்த 13-ந் தேதி தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டது.

இதுவரை 400-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப மேலும் பல தியேட்டர்களை தடுப்பூசி மையமாக மாற்றுவோம் என்று பிக்சர்டைம் டிஜிபிளெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

dailythanthi