பிளஸ் 2 முடிவுகள் வெளியானது

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று (ஜூலை 19) வெளியானது. வரும், 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு இன்றி மதிப்பெண் வழங்குவது குறித்த, வழிகாட்டு முறையை முடிவு செய்ய, மதிப்பெண் நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, மதிப்பெண் வழங்கும் முறை முடிவானது. பிளஸ் 2 செய்முறை தேர்வின், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில், 20 சதவீதம் மற்றும், 10ம் வகுப்பில் அதிகபட்சம் மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில், 50 சதவீதம் சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண்ணாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் விபரம், இன்று அரசு தேர்வு துறையால் வெளியிடப்பட்டது. பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், அரசு தேர்வு துறை அலுவலகத்தில், காலை, 11 மணியளவில் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார். தேர்வு துறை இணையதளமான www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ஒவ்வொரு மாணவரும் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை, வரும், 22ம் தேதி பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

dinamalar