கடைகளில் நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன? அரசுக்கு சில யோசனைகள்

 கடைகளில் நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன? அரசுக்கு சில யோசனைகள்

கோவை: ‘பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கடை, வர்த்தக நிறுவனங்களில் கூட்ட நெரிசல் தவிர்க்க, வியாபார நேரத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தொற்று பரவல் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்’ என, வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் நகர பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்வது, வணிக நிறுவனங்கள், கடைகள் திறப்பு, தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கி விட்டன; மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பி வருகிறது. அடுத்ததாக பண்டிகைகள் வர இருக்கின்றன. விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி என, பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்துவர இருப்பதால், ஜவுளி, நகைகள், மளிகை பொருட்கள், இனிப்பு, கார வகைகள் வாங்க, பொதுமக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு வரத் துவங்குவர்.

வர்த்தக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடுவதை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க தேவையான வசதிகளை செய்துகொடுக்க தமிழக அரசு, கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அளிக்க வேண்டும். தற்போது, காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரையே வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன; இதை, இரவு 11:00 மணி வரைகூட நீட்டிக்கலாம் என்ற கருத்து வர்த்தகர்கள் தரப்பில் முன் வைக்கப்படுகிறது.

வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு:

* ஜவுளி, நகை மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கடையின் பரப்புக்கு ஏற்ப, வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். நுழைவாயிலில் செக்யூரிட்டிகள் நியமித்து கடைக்குள் செல்வோர், வெளியே வருவோர் எண்ணிக்கையை கண்காணிக்கலாம்.

* எத்தனை வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கியபின் வெளியே வருகிறார்களோ, அந்த எண்ணிக்கையில் புதிய வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். ஒரே நேரத்தில் பெருந்திரளாக வாடிக்கையாளர்கள் திரளுவதை இதன் மூலம் தடுக்கலாம். கொரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என மருத்துவத் துறை எச்சரித்திருப்பதால், வர்த்தக நிறுவனத்தினரும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

* தொற்று பரவல் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்புகளை கடைக்குள் அறிவித்த வண்ணம் இருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும். வர்த்தகமும் முக்கியம்; தொற்றும் பரவக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு வியாபாரிகள், வர்த்தக நிறுவனத்தினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

* பொருட்கள் வாங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செல்வதை தவிர்க்கலாம். முக்கியமானவர்கள் மட்டும் சென்று தேவையானவற்றை தேர்வு செய்து வாங்கலாம். வேலைக்குச் செல்வோர் பணி முடிந்தபின் மார்க்கெட்டுக்குச் செல்கின்றனர். இதனால் மாலை நேரத்துக்குபின், வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதனால் மொத்த கொள்முதல், சில்லறை வியாபாரம் என பிரித்து, வர்த்தகம் செய்ய வேண்டும்.

* தமிழக அரசு, வர்த்தகத்தை மீட்டெடுக்க, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவதோடு, சுகாதாரத்துறை, பறக்கும் படை அலுவலர்கள் கவனமுடன் கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். விதிமீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். வர்த்தக நேரத்தை காலை 6:00 முதல் இரவு 11:00 மணி வரை அனுமதிக்கும் பட்சத்தில், நிறுவன தொழிலாளர்களுக்கு ஷிப்ட் முறையை அமல்படுத்தலாம்.

கூடுதல் பஸ் வசதி

இரவு, 11:00 மணிக்கு ‘பர்சேஸ்’ செய்தாலும், வீட்டுக்கு திரும்பிச் செல்ல பொது போக்குவரத்து அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட விதி தளர்வு நேரங்களில் ஆட்டோ, கால் டாக்சிகள் இயங்க அனுமதிக்க வேண்டும். கிராமப்புற மக்கள் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க, நகர்ப்புறத்தை நோக்கி சாரை சாரையாக வருகின்றனர். ஒரே பஸ்சில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை திணிக்காமல், தேவைக்கேற்ப கூடுதல் ‘டிரிப்’புகள் இயக்க வேண்டும்.

அதேநேரம், இரவில் திரும்பிச் செல்ல போதிய பஸ் வசதி இல்லை என்பதால், மாலை நேரத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கு வர மக்கள் தயங்குகின்றனர். காலை நேரத்தில் அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் மார்க்கெட்டுக்கு வருவதால், தேவையற்ற சிரமம் ஏற்படுகிறது; நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போதுமான பஸ்கள் இயக்குவதுடன், பாதுகாப்பினையும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்துள்ளது

dinamalar