மஞ்சு தேவி துக்கம் பொங்க, கண்ணீர் பெருக்கி, சுமார் மூன்று மணி நேரம், குடும்பத்தினருடன் பிகார் மாநிலத்தின் நாலந்தாவில் உள்ள ஹில்சா டிஎஸ்பி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அமர்ந்திருந்தார்.
காவல்துறையினருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மஞ்சுவின் கர்ப்பிணி மகள் காஜல் வரதட்சணைக் கொடுமையால் கணவரின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டு, சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டி எரிக்கவும் முயற்சி செய்யப்பட்டுள்ளது.
அவரது உடல் துண்டுகள், அருகிலுள்ள வயலில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது என்றும் அவற்றை ஒரு பையில் அடைத்துக் கொண்டு வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கு, ஜூலை 20 ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் காவல்துறையினர் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிக்கமுடியவில்லை.
நடந்தது என்ன?
பாட்னா மாவட்டம் பக்தியார்பூரில் உள்ள பிஹடா கிராமத்தைச் சேர்ந்த காஜல், நாலந்தாவில் உள்ள ஹில்சாவின் நோனியா பிகஹ் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீத் குமாரைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சஞ்சீத் ரயில்வேயில் குரூப் டி ஊழியராக பெங்களூரில் வேலை பார்க்கிறார்.
திருமணத்தின் போது, அவர்கள் சுமார் 12 லட்சம் ரூபாய் வரதட்சணை, தவிர கூடுதலாக நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் கொடுத்திருந்தனர் என்று காஜலின் குடும்பத்தினர் கூறுகிறார்கள், ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு, கணவனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததையடுத்து ஆறு லட்சம் ரூபாய் கூடுதலாகக் கேட்டுள்ளனர்.
ரயில்வேயில் குரூப் டி-யில் இருந்த கணவன், பதவி உயர்வு பெற்ற பின்னர் டி.டி.இ ஆகிவிட்டதால் அதிக வரதட்சணை கோரியதாக காஜலின் குடும்பத்தினர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
தன்னை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்துவதாகவும் காஜல், முன்னரே தனது பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.
ஜூலை 17 அன்று தனது மகளுடன் கடைசியாகப் பேசியதாக மஞ்சு தேவி தெரிவிக்கிறார். பிபிசியிடம் அவர், “தனக்கு அச்சமாக இருப்பதாக காஜல் சொன்னாள். ஒன்பது மணிகு அவளுடைய மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. யாருடைய மொபைலையும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.
கொலை செய்யப்பட்ட பெண்
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் காஜலைப் பேசவிடவில்லை என்று அவர் கூறினார். இதற்கு முன்பே அவர்கள் அவளைப் பிறந்த வீட்டிற்கு அனுப்ப ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
காஜலின் தந்தையும் சகோதரரும் அழைத்து வரச் சென்றபோதும் அவளை அவர்கள் அனுப்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பையில் அடைக்கப்பட்ட உடல் துண்டுகள்
காஜலைத் தொடர்பு கொள்ள முடியாததால், குடும்ப உறுப்பினர்கள் அவளைத் தேடத் தொடங்கினர். சில கிராமவாசிகள் சுற்றியுள்ள வயல்களில் தேடச் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் வயல்களுக்கு நடுவில் பல துண்டுகளாக ஒரு சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர் குடும்பத்தினரும் காவல் துறையும் சேர்ந்து.
காவல்துறையினர் முன்னிலையில் தான் தாங்கள் சடலத்தின் துண்டுகளைப் பையில் அடைத்ததாக காஜலின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
காஜலின் தந்தை அரவிந்த்குமார் பிபிசியிடம், “வேறு எப்படிக் கொண்டு வருவது. அவள் 17 ஆம் தேதி காலையில் காணாமல் போனாள், நான்கு நாட்களுக்குப் பிறகு, 21 ஆம் தேதி அவளது சடலம் எரிக்கப்பட்டுள்ளது. அந்த உடலின் நிலை எப்படி இருந்திருக்கும்? கை கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. அதனால் அவற்றைப் பையில் அடைத்துக் கொண்டு வந்தோம்” என்று கூறுகிறார்.
“அங்கே போலீசார் இருந்தார்கள், ஆனால் அவர்கள் சடலத்தின் துண்டுகளைத் தொடக்கூட இல்லை. என்ன செய்வது.” என்று அவர் தெரிவித்தார்.
சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தக் கிராமத்தில் தான் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
சடலத்தின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், எரிந்த மரக்கட்டை, எரிந்த புல் ஆகியவற்றின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலே இருந்த மரத்தின் இலைகளும் எரிந்து போயிருந்தன. வயலில் வேலை பார்த்த ஒரு பெண்மணி, உடலைப் பார்த்ததாகக் கூறியதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கொலை வழக்குப் பதிவு
காவல்துறையினர் ஜூலை 20 ம் தேதி வழக்கை பதிவு செய்தனர். அன்றே, உடல் துண்டுகள் பாட்னாவுக்குப் பிரேதப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள் இன்னும் அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.
ஜூலை 23 ம் தேதி காஜலின் குடும்ப உறுப்பினர்களிடம் காவல் துறையினர் உடல் துண்டுகளை ஒப்படைத்தனர். அதனையடுத்து அந்த உடல், பாட்னாவில் கங்கை நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.
ஹில்சா டிஎஸ்பி கிருஷ்ணா முராரி பிரசாத் பிபிசியிடம், “304 பி இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்திரவதை காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது. இது கொலையாகவும் இருக்கலாம் தற்கொலையாகவும் இருக்கலாம். ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணவன், கணவனின் சகோதரர், இரு சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்கள். ” என்று தெரிவித்தார்.
இது ஒரு கொலையா அல்லது தற்கொலைக்குப் பிறகு உடல் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் ஆனால் சித்ரவதை செய்யப்பட்டு உயிர் பிரிந்திருப்பது மட்டும் தெளிவாக உள்ளது என்றும் காவல் துறை தெரிவிக்கிறது. இந்தச் செய்தி வெளியாகும் வரை, இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.
தகவல் அறியாத அண்டை வீட்டார்
குற்றம் சாட்டப்பட்டவரின் வீடு சடலம் கண்ட இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. சாலையின் இருபுறமும் வீடுகள் உள்ளன, இது மக்கள் நெருக்கமாக வாழும் பகுதி. ஆனால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.
அண்டை வீடுகளில் அமர்ந்திருந்த சில பெண்கள், அந்தக் குடும்பத்தோடு தங்களுக்கு அதிக நெருக்க உறவு இல்லை என்று கூறுகிறார்கள். இதற்கு முன்பு அந்த வீட்டில் எந்தவிதமான சத்தமும் சண்டையும் கேட்கவில்லை என்று மட்டும் கூறுகிறார்கள்.
குடும்பத்தினர் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர், அக்கம்பக்கத்தினர் தங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள்.
வாழ்நாள் சோகத்திலும் நியாயம் கிடைக்க நம்பிக்கை
விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிப்போம் என்று காவல் துறை கூறுகிறது. காஜலின் குடும்பத்தினர் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், ஆனால் ஒரு விஷயம் அவர்களை உறுத்திக்கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் தங்கள் மகளை அழைத்துவந்திருந்தால் இந்தச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று வருந்துகிறார்கள்.
காஜலின் தந்தை அரவிந்த்குமார், “நாங்கள் எங்கள் மகளை அரக்கனின் கைகளில் கொடுத்து விட்டோம். அவள் வீட்டிற்கு வந்ததும், அவளைக் குழந்தை பிறக்கும் வரை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று தான் நினைத்தோம். ஆனால் அவர் வீட்டார் அழைத்தனர். அவர்கள் கோபித்துக் கொள்வார்களே என்று அனுப்பினோம். பிறகு அழைத்துவர முடிவு செய்தோம். பௌர்ணமி அன்று அழைத்து வருவதாக இருந்தோம். அதற்குள் இப்படி ஆகி விட்டது” என்று கண்ணீர் வடிக்கிறார்.
(நன்றி BBC )