கொரோனா இரண்டாம் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபடுவது அதிகரித்ததால், இந்தியர்களின் மருத்துவ செலவுகள் படுபயங்கரமாக அதிகரித்தன. காப்பீடுகளைத் தாண்டி, தற்போது மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள க்ரவுட் ஃபண்டிங்கை (பலர் சேர்ந்து நிதியளிப்பது) நாடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் தன் இரண்டாவது குழந்தையப் பெற்றெடுத்த பிறகு சுப்ரஜா ரெட்டி யெருவாவால் சுவாசிக்க முடியவில்லை. இந்த 27 வயது பெண்மணி, பேறு கால பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று வந்ததில் இருந்து தொடந்து கொரோனா அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
பிறகு தீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் அங்கேயே சிகிச்சைபெற்று வருகிறார்.
தன் ஆறு வயது மகள் மற்றும் புதிதாகப் பிறந்த ஆண் மகனோடு, தன் மனைவி குணமடைந்து வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் விஜய யெருவா.
தன் மனைவியின் மருத்துவ செலவுகளாக சுமார் 60 லட்சம் ரூபாயை சமாளிக்க முடியாமல் விஜய் யெருவா திணறிக் கொண்டு இருக்கிறார். இந்த தொகை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், க்ரெடிட் கார்ட், வங்கிக் கடன் என பல வழிகளில் பணத்தை திரட்டியுள்ளார். எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின், இந்த 35 வயதுக்காரர் தற்போது கீட்டோ என்கிற க்ரவுட் ஃபண்டிங் வலைத்தளத்தை நாடியுள்ளார்.
பொறியாளரான விஜய்க்கு மாதம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. தான் முன் பின் அறியாத நபர்களிடம் பணம் கேட்பேன் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்கிறார்.
“என் குடும்பத்தை நடத்த நான் கடினமாக உழைத்தேன், நான் யாரிடமும் எந்த உதவியையும் கேட்டதில்லை” என்கிறார் வ்ஜய். “இப்போது கூட இப்படி பணம் திரட்டப்படுவதைக் குறித்து மற்றவர்களிடம் கூற சங்கடமாக இருக்கிறது”
கொரோனாவால் இந்தியாவில் பலர் மருத்துவ செலவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரச்னையைத்தான் இது பிரதிபலிக்கிறது.
இந்த சிரமமான காலகட்டத்தில் பலரும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள க்ரவுட் ஃபண்டிங்கை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதை மருத்துவ காப்பீடு மற்றும் அரசுத் திட்டங்களுக்கு மாற்றாகப் பார்க்கிறார்கள்.
கீட்டோ மிலாப், கிவ் இந்தியா ஆகிய மூன்று க்ரவுட் ஃபண்டிங் வலைத்தளங்கள் இணைந்து மொத்தம் 161 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் 1200 கோடி இந்திய ரூபாய்) 27 லட்சம் பேரிடமிருந்து வசூலித்திருக்கிறது.
கீட்டோவில் 12,000 கொரோனா பிரசாரங்களுக்கு 40 மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் திரட்டப்பட்டுள்ளது என்கிறது கீட்டோ. கொரோனா அலைகளின் போது க்ரவுட் ஃபண்டிங் நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
“பல சமயங்களில், க்ரவுட் ஃபண்டிங் என்பது சுகாதார அமைப்பில் இருக்கும் இடைவெளியை சரி செய்யும் மாற்று வழியாகி இருக்கிறது” என க்ரவுட் ஃபண்டி: தி ஸ்டோரி ஆஃப் பீபிள் என்கிற புத்தகத்தை எழுதிய ரவினா பன்ஸே மற்றும் இர்ஃபான் பஷீர் கூறுகின்றனர்.
கொரோனாவுக்கு முன்பே கூட, இந்தியாவில் இருக்கும் லட்சக் கணக்கான நோயாளிகளுக்காக பெரிய அளவில் க்ரவுட் ஃபண்டிங் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் என்கிற சஞ்சிகை மற்றும் இந்தியாவின் பொது சுகாதார அமைப்பு (PHFI) இணைந்து நடத்திய ஆய்வில் 2011 – 12 ஆண்டு காலத்தில் கூடுதலான மருத்துவ செலவுகளால் 3.8 கோடி பேர் ஏழ்மையில் தள்ளப்பட்டதாகக் கூறுகிறது.
இந்த கொரோனா மருத்துவ கடன்களால் எத்தனை பேர் ஏழ்மை நிலைக்குத் ஹள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை. ஆனால் டியூக் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் மற்றும் பி ஹெச் எஃப் ஐ அமைப்பின் மதிப்பீடுகள்படி, இந்தியாவில் சுயமாக வேலை பார்த்து வரும் மூன்றில் இரண்டு பங்கினர் மற்றும் சம்பளம் வாங்குபவர்களில் பாதி பேரால் அவசர் சிகிச்சையைப் பெற முடியாது என்கிறது.
கடந்த ஆண்டு கூடுதலாக 23 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீதுதான் சுமை அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் கடன்களை அடைக்க சராசரியாக 201 அமெரிக்க டாலரை கடன் வாங்கியுள்ளனர்.
இந்தியாவின் சுகாதார செலவீனம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.2 சதவீதம் மட்டுமே – இது உலகின் மிகக் குறைவான ஒன்று. சுமார் மூன்றில் இரு பங்கு இந்தியர்கள் எந்த ஒரு சுகாதார காப்பீடும் இல்லாமல் இருக்கின்றனர்.
“பெரும்பாலான மக்கள் நிதிநிலைகள் உறுதியற்ற நிலையிலேயே தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் போது, எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகள் ஏற்படுவது பேரழிவை ஏற்படுத்தும்.” என்கிறார் பஷீர்.
2018ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமான “மோதிகேர்” -ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் 50 கோடி குடிமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.
பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் சேர தகுதியுள்ளவர்களில் 13 சதவீதம் பேருக்கு மட்டுமே காப்பீட்டைக் கோர முடிந்தது என்கிறது ப்ராக்ஸிமா கன்சல்டிங்கின் ஆய்வு ஒன்று.
இந்த திட்டம் வெளிநோயாளர் செலவுகளையும் ஈடுகட்டாது. ஒட்டு மொத்த மருத்துவ செலவினங்களிலேயே இது தான் பெரும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
நாக்பூரைச் சேர்ந்த, சின்மய் ஹிவாஸ் தன் 57 வயது தந்தை ராஜேஸ் ஹிவாஸுக்காக, ஆக்சிஜன் மற்றும் காலி படுக்கை கேட்டு மூன்று நாட்கள் பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கினார். கொரோனா உடனான தனது போராட்டம் முடிந்துவிட்டதாக அவர் நினைத்தார்.
ஆனால் அவரது தந்தைக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ பரிசோதனையில், அவர் மியூகோர்மைகோசிஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
தினமும் 94 டாலர் செலவில் செலுத்தப்பட வேண்டிய ஊசிகளால், அவரது மொத்த மருத்துவ செலவான 33,633 டாலரோடு அதுவும் சேர்ந்து கொண்டது.
25 வயது இளைஞர் ஒருவரால் யோசித்துக் கூட பார்க்க முடியாத தொகை அது. அவர் இப்போதுதான் தன் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். “அத்தொகையைப் பார்த்து நாங்கள் அதிர்ந்துவிட்டோம்” என்கிறார் அவர்.
அவர் தந்தை ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மாதம் 605 டாலர் ஈட்டும் ஊழியராக பணியாற்றி குடும்பத்தை நடத்தி வந்தார்.
அவருக்கு மருத்துவக் காப்பீடு இல்லாததால், அவரின் வாழ்நாள் சேமிப்புகள் கரைந்து காணாமல் போயின, பலரிடம் கடன் வாங்க வேண்டி வந்தது, தற்போது க்ரவுட் ஃபண்டிங் மூலம் பணத்தைத் திரட்டவும் தொடங்கியுள்ளனர்.
இதுவரை அவர்கள் திரட்ட வேண்டிய மொத்த பணத்தில் சுமார் பாதியைத் (11,956 டாலர்) திரட்டியுள்ளனர். இது இத்தனை பலனளிக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் சின்மயி.
“அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற முடியாத நபர்களுக்கு க்ரவுட் ஃபண்டிங் வாய்ப்பளித்துள்ளது” என பன்ஸே கூறுகிறார்.
நன்கொடையாளர்கள் பெரும்பாலும் நிதி திரட்டுபவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களாக இருக்கின்றனர், ஆனால் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் அந்நியர்கள் சூழலை உணர்ந்து நன்கொடை கொடுக்க உந்தப்படுகிறார்கள்.
ஆனால் நன்கொடைகள் பெரும்பாலும் இதயத்தைத் உருக்கும் கதைகள் அல்லது வலுவான சமூக வலைப்பின்னல்களைக் கொண்ட நோயாளிகளை நோக்கி செலுத்தப்படுகின்றன. இது மிகவும் கடுமையான நிகழ்வுகளுடன் மட்டுமே மக்கள் பரிவு கொள்ளும் சூழலை வளர்க்கிறது என பன்ஸே மற்றும் பஷீர் கவலைப்படுகிறார்கள்.
“நன்கொடை கேட்கும் அனைவருமே ஒரு சிறந்த கதைசொல்லி அல்ல, அனைவருக்கும் மிக தீவிரமான பிரச்னைகளும் இல்லை” என அவர்கள் கூறினர்.
பாதி நாடு இணையத்தை அணுக முடியாத நிலையில், க்ரவுட் ஃபண்டிங்கில் ஒரு தகவல் சமமயற்ற நிலையை உருவாக்க முடியும்.
நன்கொடைகளை எல்லாம் தாண்டி, சின்மயியின் நிதி சிக்கல்கள் தீர வெகு காலமாகும். கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும், அவரது தந்தையின் சிகிச்சையும் நீண்ட காலம் எடுக்கும்.
“மற்றவர்களின் உதவியின்றி எங்களால் ஊசி போட முடியாது,” என்று அவர் கூறினார். “இப்படிப்பட்ட ஆதரவு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.” என்கிறார் அவர்.
ஹைதராபாத்தில், விஜய் தனது மனைவியின் சிகிச்சைக்காக தனது சொத்துகளையும் வீட்டையும் கூட விற்க ஆலோசித்து வருகிறார்.
“இந்த பிரச்னை எல்லாம் முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும், ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் தாய் இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
(நன்றி BBC )