கொரோனா தடுப்பூசி -பூட்டான் சாதனை

இந்தியா மற்றும் சீனா என்கிற இரண்டு பெரிய தேசங்களுக்கு இடையில், இமய மலையில் அமைந்திருக்கிறது பூட்டான். இந்த சிறிய நாடு, தகுதியான எல்லா பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தி முடிக்க இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு, இந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் விதத்தை பெரிய வெற்றிக் கதையாகக் குறிப்பிட்டு இருக்கிறது.

எட்டு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பூட்டானில், 90 சதவீதத்துக்கும் அதிகமான பெரியவர்கள் ஏழே நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்கிறது அந்நாட்டின் சுகாதார அமைச்சகம்.

மலையில் அமைந்திருக்கும் பூட்டானில் எப்படி இத்தனை விரைவாக தடுப்பூசி செலுத்தினார்கள்?

சிக்கலான நில அமைப்பு

“நில அமைப்பால் சிக்கல்களை எதிர்கொண்டோம், ஆனால் சரியான திட்டமிடலால், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகளை ஒரே வாரத்தில் முன்னெடுக்க முடிந்தது” என்கிறார் பூட்டானின் தடுப்பூசி செலுத்தும் டாஸ்க் ஃபோர்ஸின் உறுப்பினராக இருக்கும் மருத்துவர் சோனம் வாங்சுக்.

“தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில், 99 சதவீதத்தினர் முதல் டோஸும், 92 சதவீதத்தினர் இரண்டாம் டோஸும் செலுத்திக் கொண்டுள்ளனர்” என பிபிசி ரேடியோவிடம் மருத்துவர் சோனம் வாங்சுக் கூறியுள்ளார்.

பூட்டானில் சுமார் 5.3 லட்சம் பெரியவர்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களில் பலரும் சாலை வசதிகளற்ற மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

சில இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் பல மணி நேரம் நடை பயணம் மேற்கொண்டு மலை கிராமங்களுக்குச் சென்று சேர வேண்டி இருந்தது.

பூட்டானில் 1,220 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மற்றும் 3,500க்கும் அதிகமான தடுப்பூசி செலுத்துபவர்கள் களமிறக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் சோனம் வாங்சுக் கூறுகிறார்.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவிடமிருந்து 5.5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைத்தன. அடிப்படை கட்டமைப்புகள் நிறுவப்பட்ட பின், அந்நாட்டின் பெரும்பாலான பெரியவர்கள் ஏப்ரல் மாதத்தில் ஒரே வாரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தடுப்பூசி நன்கொடை

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டு, ஒட்டு மொத்த இந்தியாவும் தடுப்பூசி, மருந்து, மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன்களுகாக திணறத் தொடங்கிய போது, இந்திய அரசு அனைத்து கொரோனா தடுப்பூசி டோஸ் ஏற்றுமதிகளையும் ரத்து செய்தது.

பூட்டான் தனக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிக்கு மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பணக்கார நாடுகள் தங்களிடம் கூடுதலாக இருக்கும் தடுப்பூசிகளை பூட்டானுக்குக் கொடுத்து உதவின.

“அமெரிக்காவிடமிருந்து ஐந்து லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசியும், ஐரோப்பிய நாடுகளிடமிருந்து 2.5 லட்சத்துக்கும் அதிகமான ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி டோஸ்களும் கிடைத்தன” என்கிறார் மருத்துவர் சோனம் வாங்சுக்.

ஜூலை 20ஆம் தேதியில் இருந்து இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

பூட்டானின் இந்த சாதனையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என யுனிசெஃப் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக தடுப்பூசி வைத்திருக்கும் நாடுகள், தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு தந்து உதவ வேண்டும் எனவும் யுனிசெஃப் கோரிக்கை வைத்திருக்கிறது.

பூட்டானிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள ஒரு பாடம் இருக்கிறது என்கிறார் யுனிசெஃப் அமைப்பின் பூட்டான் பிரதிநிதியான வில் பார்க்ஸ்.

” குறைவான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமே இருக்கின்ற பூட்டான் போன்ற நாடுகளில் கூட, உறுதியான அரசரும், அரசு அமைப்பும் இருக்கும் போது நாட்டில் உள்ள எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்துவது முடியாத காரியமல்ல என்பதை உலகம் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன்” என்கிறார் அவர்.

பூட்டானில் பெரும்பாலானவர்களுக்கு இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. முதல் டோஸாக பலருக்கு ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனீகாவும், இரண்டாவது டோஸாக மாடர்னாவும் செலுத்தப்பட்டுள்ளன.

அரசின் மீதான நம்பிக்கை

பூட்டானில் இதுவரை சுமார் 2,500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இருவர் மட்டுமே இறந்திருப்பதாகவும் கூறுகிறது அந்நாடு.

பூட்டானில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை என்கிறார்கள் பூட்டான் அதிகாரிகள்.

“மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் அரசை நம்புகிறார்கள்” என்கிறார் மருத்துவர் சோனம் வாங்சுக்.

 

(நன்றி BBC)