கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனால் அவர்கள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஆபத்தான முறையில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறியதாவது:
பாப்பாரப்பட்டி ஊராட்சி மற்றும் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராமங்களில் செல்போன் கோபுரம் இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. எங்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக குடிநீர் தொட்டிகளிலும், மரங்களிலும் அமர்ந்து பாடம் படித்து வருகிறோம்.
ஆனால் மாணவிகளால் மரங்களிலோ, குடிநீர் தொட்டிகளிலோ ஏறி கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.
எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் எங்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி கூறுகையில், ‘எங்கள் பகுதி மாணவ, மாணவிகளின் நலன் கருதி, செல்போன் கோபுரம் அமைக்க ஊராட்சி சார்பில் நிலம் தர தயாராக உள்ளோம். செல்போன் நிறுவனங்கள் கோபுரம் அமைக்க முன் வர வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
(நன்றி Samayam Tamil)