சேலத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை பெண் காவலர் உடல்தகுதி தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான திருநங்கை வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக முழுவதும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் ஆண்களுக்கான முதல்கட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது பெண்களுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் அதிகளவில் பங்கேற்று உள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டம் காதப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ரூபா என்ற திருநங்கை தேர்வுக்காக வந்திருந்தார்.
அவரது அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்ட பின் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் அனைத்து உடல் தகுதி தேர்விலும் அவர் மற்ற பெண்களை விட முன்னிலையில் வந்து தனது தகுதியை உறுதி செய்தார். இதனையடுத்து உடல்தகுதி தேர்வில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்த திருநங்கை பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு தற்போது வேலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்று தேர்வு பெற்றிருப்பது திருநங்கைகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வரும் நிலையில் தற்போது திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவது பாராட்டத் தகுந்த விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
(நன்றி Tamil samayam )