மும்பை :
நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இப்படியொரு விபரீத கொலை நடந்து இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நவிமும்பை ஐரோலி செக்டார்- 7 பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உண்டு. மகளை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். அந்த தம்பதியின் மகளுக்கு 15 வயதே ஆன நிலையில், அவளை நீட் தேர்வுக்கு படிப்பதற்காக பயிற்சி மையத்தில் பதிவு செய்தனர்.
ஆனால் டாக்டருக்கு படிக்க தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்து வந்தாள். இதை ஏற்காத பெற்றோர் நீட் தேர்வுக்காக பயிற்சி பெறும்படி சிறுமியை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சிறுமி செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதை அவளது தந்தை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இதையடுத்து அங்கு சென்ற தாய், வீட்டுக்கு வரும்படி மகளை அழைத்தார். ஆனால் சிறுமி வீடு திரும்ப மறுத்தாள். நீ்ட் தேர்வுக்கு படிப்பதற்காக கட்டாயப்படுத்துவதால் தான் வெறுப்படைந்து இருப்பதாகவும், பெற்றோருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தாய், மகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் விவரத்தை தெரிவித்தார். போலீசார் சிறுமி மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி சிறுமியின் தாயின் போனில் இருந்து தந்தைக்கு வாட்ஸ்அப் தகவல் வந்தது. அதில் ‘நான் விடைபெறுகிறேன்’ என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் சிறுமி தந்தைக்கு போன் செய்து, தாய் கதவை திறக்க மறுக்கிறார் என்று கூறினாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உறவினருக்கு போன் செய்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி தெரிவித்தார். உறவினர் அங்கு சென்று பார்த்தபோது, வெளிப்புறமாக வீடு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்த பெண் பிணமாக கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பெண்ணின் கழுத்தை கராத்தே பெல்ட் சுற்றியபடி இருந்தது.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பெண்ணின் தலையில் காயம் இருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் போலீசார் கொலையான பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.
அப்போது 15 வயது சிறுமி மீது போலீசாருக்கு சந்தேகப்பார்வை எழுந்தது. சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து நடந்த விவரத்தை கூறும்படி கேட்டனர். அப்போது தாயை கொலை செய்து விட்டு, உண்மையை மறைக்க முயன்றதாக சிறுமி கூறிய தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தது.
இதுபற்றி சிறுமி போலீசாரிடம் கூறியதாவது:-
சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்தபோது, எனது படிப்பு தொடர்பாக தாயுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது தாய் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து என்னை மிரட்டினார். என்னை கொல்ல வருவதாக பயந்தேன். உடனே தாயை தள்ளி விட்டேன். அவர் கீழே விழுந்தபோது கட்டிலில் அவரது தலை பட்டு காயம் அடைந்தார். அரை மயக்கத்தில் கிடந்த தாயை கராத்தே பெல்டை எடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் எனது தாயின் போனில் இருந்து தந்தைக்கு வாட்ஸ்அப் தகவல் அனுப்பி விட்டு, கதவை பூட்டி விட்டு வெளியே சென்று தந்தைக்கு போன் செய்து தாய் கதவை திறக்க மறுப்பதாக பொய் கூறினேன்.
இவ்வாறு சிறுமி கூறினாள்.
கிரைம் நாவலை போன்ற இந்த மர்ம கொலையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்த நிலையில் போலீசார் சிறுமியை பிடித்து, அவள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால், சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இப்படியொரு விபரீத கொலை நடந்து இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
(நன்றி Maalaimalar)