சென்னை: தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாவது அலை குறைந்தாலும் சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், தினசரி கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் 38 சதவீதம் பேர் மட்டுமே சரியாக மாஸ்க் அணிகிறார்கள். கூட்டமான இடத்திற்கு செல்பவர்கள் பலர் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. தடுப்பூசி போடாமல், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். அப்படி செல்வதால், கோவிட் பாதிப்பு அதிகரிக்கம்.
கூட்டம் கூடுவதால் கோவிட் தொற்று அதிகரிக்கிறது. சென்னையில் 300 பேர் கூடிய இடத்தில் 24 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒருவர் மரணமடைந்தார். அவருக்குநீரழிவு நோய் இருந்தது. தடுப்பூசியும் போட்டு கொள்ளவில்லை. அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சமூக இடைவெளி இல்லை. கோவிட் குறித்த விழிப்புணர்வுவும், மனமாற்றமும் மக்களுக்கு தேவை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கோவிட் இல்லை என்ற இலக்கை எட்ட முடியும். தடுப்பூசி போடுங்கள் என்று வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் தடுப்பூசி போடுவதில்லை. கோவிட்டை பொது மக்கள் அலட்சியமாக நினைக்க வேண்டாம். அடையாளம் தெரியாத மனித வெடிகுண்டை போல் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். இதனால், தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
dinamalar