கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தலைமையிலான குழு கேரளாவுக்கு வந்தது.
திருவனந்தபுரம், நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் தணிந்து விட்டது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
அங்கு நேற்று முன்தினம் 18 ஆயிரத்து 582 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, நாடு முழுவதும் தினந்தோறும் ஏற்படும் பாதிப்புகளில் 50 சதவீதத்துக்கு மேலாகும்.
தேசிய அளவிலான தினசரி தொற்று விகிதம் 3 சதவீதத்துக்கு கீழ் இருக்கிறது. ஆனால், கேரளாவில் 15.11 சதவீதமாக உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என்று அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
இதை கருத்தில்கொண்டு, கேரளாவில் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு உதவ முன்வந்துள்ளது. இதற்காக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய குழு நேற்று கேரளாவுக்கு வந்தது.
இக்குழுவில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளை மான்சுக் மாண்டவியா சந்திக்கிறார்.
கொரோனா தடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்கிறார். கூடுதலாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிடுகிறார்.
dailythanthi