மதுரைக்கு மெட்ரோ; அறிவிப்பை அரங்கேற்றுமா அரசு

மதுரை: தமிழகத்தில் 2வது பெரிய நகராக கருதப்படும் மதுரையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப நகருக்குள் நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஓரிடத்திலிருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கிறது.

புராதன, வரலாற்று நகரமான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து அமையப்பெற்றது. இதனால் இருக்கும் வீதிகள், தெருக்கள், ரோடுகளை கொண்டே விரிவடைந்து வருகிறது. 75 வார்டுகளாக இருந்த மதுரை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளுடன் மெட்ரோ நகர் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் அரை நுாற்றாண்டுகளாக ஆளும் திராவிட கட்சிகளால் மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியவில்லை. அரசியல் கட்சி துவக்கமாகட்டும், தேர்தல் பிரசார துவக்கமாகட்டும் அனைத்து கட்சிகளையும் தேர்வு செய்வது மதுரையை தான். ஆனால் வெற்றி பெற்று வந்த பிறகு மற்ற நகரங்களில் காட்டும் அக்கறையை மதுரை மீது காட்ட மறந்து விடுகின்றன.

அரை நுாற்றாண்டு கனவு திட்டம்

மதுரையில் சர்வதேச கஸ்டம்ஸ் விமான நிலையம் இருந்தும் தற்போது துபாய், இலங்கை, மலேசியாவிற்கு மட்டுமே நேரடி விமானங்கள் உள்ளன. அகல ரயில் பாதை, மின்மயமாக்கலில் மதுரை பின்தங்கியே இருக்கிறது. போக்குவரத்துக்கு மக்கள் சாலை மார்க்கத்தையே நம்பியிருக்கின்றனர். இதனால் பஸ்,லாரி, கார், ஜீப், வேன் என வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.

அழகர்கோவிலில் இருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலத்திற்கு அரசு பஸ்களில் செல்ல அரை நாளாகி விடும். அதுபோல மாட்டுத்தாவணியிலிருந்து விமான நிலையம், திருமங்கலம், நாகமலைபுதுக்கோட்டை மதுரை காமராஜ் பல்கலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் பல மணி நேரமாகிறது. ஆட்டோ, கார்களிலும் சென்றாலும் கோரிப்பாளையம், சிம்மக்கல்,பெரியார் பஸ் ஸ்டாண்ட், காளவாசல் சந்திப்பு, பழங்காநத்தம் சந்திப்புகளை கடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

தற்போது தான் ஆங்காங்கே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்படுகின்றன. அந்த பாலங்கள் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வர அரை நுாற்றாண்டாகிவிடும். நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவையை துவக்க வேண்டும் என மதுரைவாசிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

நிதி நிலையால் கிடப்பில் போடப்பட்ட அவலம்

2011 ல் சட்டசபை தேர்தலின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். ஆனால் நிதி நிலைமை காரணமாக அத்திட்டம் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதாவிடம் இதை சுட்டிகாட்டி சிறப்பு நிதி பெற்று திட்டத்தை நிறைவேற்ற அ.தி.மு.க.,வினரும் தயாராகவில்லை.

அந்தாண்டு நடந்த மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்ட ராஜன்செல்லப்பாவும், தன் தேர்தல் அறிக்கையில் மெட்ரோரயில் இல்லை என்றால் மேனோ ரயில் திட்டத்தையாவது கொண்டு வருவேன் என்றார். ஆனால் அப்போதிருந்த மாநகராட்சி நிர்வாக நிதி நெருக்கடியில் குடிநீர், ரோடு பணிகளை செய்வதே பெரும் சாவலாக அமைந்திருந்தது.

அன்றும், இன்றும் சொன்னது என்ன

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஜெ., முதல்வராக இருந்த போது எம்.எல்.ஏ.,ஆக இருந்த தற்போதைய நிதியமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் பேசுகையில்,” மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றாமல் எதையும் செய்ய முடியாது. மதுரை மூவாயிரம் ஆண்டுகள் பழமையான நகரம். ஆனால் அதற்கு பின்னால் உருவான வியன்னா,ரோம்,லண்டன் போன்ற நகரங்கள் பெரிய வளர்ச்சி அடைந்துடைந்துள்ளன. நான் பணி நிமித்தமாக 60 நாடுகளுக்கு சென்றிருக்கிறேன்.

எல்லா நகரங்களிலும் போக்குவரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நம்பியுள்ளன,’ என குறிப்பிட்டதாக அவரே தெரிவித்திருக்கிறார். தற்போது அவர் நிதியமைச்சராக தாக்கல் செய்த பட்ஜெட்டில், ”மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கப்படும்,” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு

கடந்தாண்டு பிரதமர் மோடி,” நாட்டில் 2025 க்குள் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவுப்படுத்தப்படும்,” என அறிவித்தார். பார்லிமென்ட்டிலும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மாநில அரசு 50 சதவீத நிதி பங்களிப்பு செய்தால் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றலாம் என மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மாறி மாறி வாக்குறுதிக்கு பஞ்சமில்லை

இருப்பினும் கூட மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சிகளில் அறிவிப்புடன் நிற்கிறது. ஆனால் இரு கட்சிகளும் ஒவ்வொரு லோக்சபா, சட்டசபை தேர்தலின் போது இத்திட்டத்தை வாக்குறுதியாக அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மதுரைக்குபின்னால் குரல் கொடுத்த கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகளும் துவங்கியுள்ளன.

நெரிசலை தீர்க்கவும், அவசியம் கருதியும் இனியும் காலம் தாழ்த்தாது மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை துவங்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். அதற்கு மதுரையை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி., குரல் கொடுக்க வேண்டும்.

dinamalar