இந்தியாவில் சிறார்களுக்கான கொரோனா வேக்சின் அடுத்த மாதம் முதல் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஐசிஎம்ஆரின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் இயக்குநர் பிரியா ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் நடந்து வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குத் தொடங்கி வேக்சின் பணிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
நாட்டில் 18+ அனைவருக்கும் வேக்சின் போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தியாவில் இதுவரை சிறார்களுக்குச் செலுத்த எந்தவொரு வேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் முடிவெடுத்து வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் பள்ளிகள் மிகவும் முக்கியமானது என்பதால் பாதுகாப்பான சூழல் உருவானதும் விரைவாகப் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். அதேநேரம் சிறார்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கும் முன் பள்ளிகள் திறப்பது தவறாக முடிந்துவிடவும் வாய்ப்புகள் அதிகம் என மற்றொரு தரப்பினர் சந்தேகம் தெரிவித்தனர்.
செப்டம்பரில் கிடைக்கும்
இந்தியாவில் சிறார்களுக்கான கொரோனா வேக்சின் சோதனை முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் அவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து ஐசிஎம்ஆரின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் இயக்குநர் பிரியா ஆபிரகாம் கூறுகையில், “இப்போது நடந்து கொண்டிருக்கும் சிறார்களுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் சிறார்களுக்கான கொரோனா வேக்சினுக்கு அனுமதி அளிக்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.
Zydus Cadila தடுப்பூசி
இந்தியாவில் தற்போது கோவாக்சின் தடுப்பூசி சோதனை சிறார்கள் மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது அதேபோல Zydus Cadila நிறுவனத்தின் ZyCoV-D கொரோனா வேக்சின் சோதனை சிறார்கள் மத்தியில் நடத்தி முடிந்துவிட்டது. மேலும் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு Zydus Cadila நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்றுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூஸ்டர் டோஸ்
தொடர்ந்து பூஸ்டர் டோஸ் குறித்துப் பிரியா ஆபிரகாம் கூறுகையில், “உலக நாடுகளில் குறிப்பிட்ட சதவிகிதம் வேக்சின் பணிகள் நடக்கும் வரை பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஏனென்றால், இப்போது உலக நாடுகள் மத்தியில் தடுப்பூசி பாகுபாடு மிக அதிகமாக உள்ளது. அதேநேரம் வரும் காலத்தில் பூஸ்டர் டோஸ் போடப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
தடுப்பூசி மிக்ஸிங்
நாட்டில் சில இடங்களில் ஒரே நபருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களை நாங்கள் பரிசோதனை செய்தோம். வேக்சின்களை மிக்ஸ் செய்து போட்டதால் எந்தவொரு மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை. அதேநேரம் நோயெதிர்ப்புத் திறன் சற்று அதிகரித்துள்ளது. எனவே வேக்சின்களை மிக்ஸ் செய்து அளிப்பதால் எந்தவொரு பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாது. இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. வரும் காலத்தில் இது குறித்துக் கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும். 45 வேக்சின் தடுப்பாற்றல் புதிய உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராக சில வகை வேக்சின் தடுப்பாற்றல் குறையலாம். ஆனாலும், கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தீவிர கொரோனா பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் கொரோனா வேக்சின்கள் குறைக்கவே செய்கிறது. டெல்டா கொரோனா உட்பட அனைத்து உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் வேக்சின் சிறப்பான பலனைத் தருகிறது” என்றார்.
(நன்றி Tamil oneindia)