கடற்படை தளங்கள் மேல் ‘ட்ரோன்’கள் பறக்க தடை

சென்னை:தமிழகத்தில் உள்ள கடற்படை தளங்களை சுற்றி, 3 கி.மீ., சுற்றளவில், ‘ட்ரோன்’கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்திய கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-

சென்னையில், ஐ.என்.எஸ்., அடையாறு, வேலுார் மாவட்டம், அரக்கோணத்தில், ஐ.என்.எஸ்., ராஜாளி, ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் ஐ.என்.எஸ்., பருந்து, திருநெல்வேலி மாவட்டத்தில், ஐ.என்.எஸ்., கட்டபொம்மன் ஆகிய கடற்படை தளங்கள் உள்ளன.பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த கடற்படை தளங்களுக்கு, எப்போதும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்பை மேலும் அதிகரிக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த கடற்படை தளங்களை சுற்றி 3 கி.மீ.,க்கு, ‘ட்ரோன்’ எனும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த பகுதியில், ட்ரோன்கள் உள்ளிட்டவை இயக்க, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், தனியார் ஏஜன்சிகள், பொது சிவில் விமான இயக்குனரகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.

இதுதொடர்பாக, ‘டிஜிஸ்கை’ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.ஒப்புதல் கிடைத்த பின், அதற்கான அனுமதி கடிதத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(நன்றி Dinamalar)