`அனைவருக்கும் அனைத்தையும் பொதுவான விதியாக மாற்ற முடியாது. கொரோனா பேரிடரில் மனநோயாளிகளை அரசு எதிர்கொண்ட விதம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அரசு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் நீதிமன்றம் சென்றே தீர்க்க முடிந்ததுதான் பெரும் துயரம்” என்கிறார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன். சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையின் மீதுதான் இவர் குற்றம் சுமத்துகிறார்.
கொரோனா பேரிடரின் முதல் அலையின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன்பின்னர், இரண்டாம் அலையின்போது நாடு முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்தனர். கடந்த 17 ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 92 ஆயிரமாக உள்ளது. இதுவரையில் 34,579 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறையின் அலட்சியம்?
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை, கட்டணமில்லா சிகிச்சை, தடுப்பூசிகள் என அரசின் சுகாதாரத்துறை முழுவீச்சில் இயங்கி வருகிறது. ”அதேநேரம், மனநலம் பாதித்தவர்களுக்கான பிரச்னைகளை அதிகாரிகள் உள்வாங்கிக் கொள்ளவில்லை”என்கிறார் நம்புராஜன். தொடர்ந்து பிபிசி தமிழுக்காக மேலதிக விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.” கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் 800 பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். கொரோனா முதல் அலையின்போது வெளியில் இருந்து உள்ளே வருகிறவர்கள் மூலமாகத்தான் தொற்று பரவியது. மருத்துவர், சமையலர் என வெளியில் இருந்து பலரும் உள்ளே செல்கின்றனர். இதனால் தொற்று காரணமாக ஒரு சில மனநோயாளிகள் இறந்து போனதாகவும் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து மனநல மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது, அங்கே இருந்து சரியான பதில் வரவில்லை. நமக்கு உடலில் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அதனை எளிதில் கூற முடியும். மனநலம் பாதித்தவர்களால் அவ்வாறு கூற முடியாது. ‘தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது’ என்றே அவர்களுக்குத் தெரியாது. அதனைக் கணக்கில் வைத்து, ‘அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்’ என சுகாதாரத்துறை செயலரிடம் கோரிக்கை வைத்தோம்.
அவரோ, ‘அறிகுறிகள் உள்ளவர்களுக்குத்தான் பரிசோதனை செய்வோம்’ என்றார். ‘அறிகுறி இருக்கு.. இல்லை என மனநலம் பாதித்தவர்களால் எப்படிக் கூற முடியும்?’ என்றோம். அங்கிருந்து பதில் வராததால், கடந்த 2020 ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தோம்.
கொரோனாவால் இறந்த மனநோயாளிகள்!
நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை தெரிவித்த தகவலில், மனநலம் பாதித்தவர்களில் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டதாகவும் அதில் 3 பேர் இறந்து போனதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், ”மனநலம் பாதித்தவர்களுக்கு ஒரே நேரத்தில் பரிசோதனை நடத்த வேண்டும்’ எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெளியில் உள்ள எங்களைப் போன்ற அமைப்புகள் வைத்த கோரிக்கையை, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை நிர்வாகமே அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். காரணம், அது மருத்துவத்துறை சார்ந்த காப்பகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளும் பிரச்னையைப் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு சாதாரண விஷயம், இதைக் கூட நீதிமன்றம் சென்றுதான் செயல்படுத்த முடிந்தது. மனநலம் பாதித்தவர்கள் எல்லாம், யாருமற்றவர்கள் என்ற பார்வை இருப்பதுதானே காரணம்?” என்கிறார்.
மனநலம் பாதித்தவர்களில் கவனிக்கப்படாமல் இருந்த பிரிவினர் என்றால், தெருவில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்தான். அவர்களை யாரும் பாதுகாக்கவில்லை. அவர்கள் தெருவில்தான் சுற்றிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநலத் திட்டம் செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை உள்பட சில மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் சிலர், தன்னிச்சையாக செயல்பட்டு தெருவில் வலம் வந்த மனநல நோயாளிகளுக்கு அதிகளவில் உதவி செய்தனர்.
”தமிழ்நாடு முழுவதும் இதே அக்கறையை காட்டினார்களா என்பதற்கு எந்தவிதத் தரவுகளும் இல்லை. தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் மனநோயாளிகளை எடுத்துக் கொள்ள மாட்டோம் என தன்னார்வ அமைப்புகள் கூறியபோதும், சில அரசு மருத்துவர்கள் மட்டுமே களப் பணியில் ஆர்வம் காட்டினர்” என்கிறார் அரசு மனநல மருத்துவர் ஒருவர்.
கொரோனா வார்டாக மாறிய மனநல வார்டுகள்
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மனநல வார்டுகளில் கடந்த ஆண்டில் புதிதாக நோயாளிகள் சேர்க்கப்படவில்லை. காரணம், மனநல வார்டுகளை எல்லாம் கொரோனா வார்டாக மாற்றிவிட்டனர்.
இதனால் மனநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. அதேநேரம், தனியார் மனநல மருத்துவமனைகளில் சேர்க்கை நடந்து கொண்டிருந்தது. ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கான மருந்து, மாத்திரைகளும் முறையாகச் சென்று சேரவில்லை. அரசு மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக மருந்தை வாங்கி வந்தவர்களும் துயரத்தை சந்தித்தனர்.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு மனநலம் பாதித்தவர்களுக்கு எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை. தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற மனநலக் காப்பகங்களும் உரிமம் பெறாத இல்லங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா பாதித்தது, தீவிர தொற்று எத்தனை பேருக்கு இருந்தது, எத்தனை பேர் இறந்து போனார்கள் என்பதற்கு அரசிடம் புள்ளிவிபரங்கள் உள்ளதா என்பதும் மிக முக்கியமான கேள்வி” என்கிறார்.
பாதிக்கும்கீழ் சரிந்த நோயாளிகளின் வரத்து!
மேலும், ”அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை திறந்தனர். அனைத்து மனநல மருத்துவர்களும் கொரோனா சிகிச்சைப் பணிக்காக அமர்த்தப்பட்டதால், மனநலம் பாதித்தவர்களுக்கு அட்மிஷன் போட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நோயாளிகள் எங்கே போய் சிகிச்சை எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை. பேருந்துகள் ஓடாததால் பல கிலோமீட்டர்கள் நடந்தும் சைக்கிளில் வந்தும் மருந்துகளை வாங்கிச் சென்றனர். பலரால் மருந்துகளை வாங்க முடியவில்லை. கொரோனா ஊரடங்குக்கு முன்பாக, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு தினமும் 450 முதல் 550 பேர் புறநோயாளிகளாக வருவார்கள். தினமும் உள் பிணியாளர்களாக 30 முதல் 50 பேர் சேர்க்கப்படுவார்கள். ஊரடங்கு அறிவிப்பால் இந்த எண்ணிக்கை பாதிக்கும்கீழ் சரிந்துவிட்டது” என்கிறார்.
” பெருந்தொற்று காலத்தில் மனநலம் தொடர்பான நோய்களுக்கு மருந்து கொடுப்பது என்பது மிக முக்கியமானது. மனச்சிதைவு நோய்க்கு தொடர் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நோயாளியால் சிக்கல் ஏற்படும். ‘மக்களே மருத்துவமனைக்கு வர வேண்டும்’ எனக் கூறாமல் இந்த மருந்துகளை தாலுகா அளவில் குழுக்களை அமைத்து கொண்டுபோய் சேர்த்திருக்கலாம். நீண்டகாலம் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளை கிராம செவிலியர்கள் மூலம் கண்காணித்திருக்கலாம். தற்போதுதான் அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநல வார்டுகள் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன” என்கிறார் கூடுதல் தகவல்களுடன்.
புதுக்கோட்டை ஆச்சர்யம்
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாவட்ட மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை அரசு மனநல மையத்தில் சேர்த்துள்ளனர். மூன்று மாதங்கள் நீடித்த சிகிச்சைக்குப் பிறகு மனச்சிதைவு நோயில் இருந்து அந்த நபர் மீண்டுவிட்டார்.
இதன்பிறகு, ‘அவரது முகவரி எது?’ எனக் கேட்டபோது, ‘திருவாரூர்’ எனத் தகவல் வந்துள்ளது. அப்போதும் அவர் குறிப்பிட்ட ஊர் பெயர், தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் இருந்துள்ளது. இதன்பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய், காவல்துறை, சுகாதாரத்துறை என பல துறைகளின் ஒத்துழைப்போடு அந்த நபரின் முகவரியைக் கண்டறிந்துள்ளனர். அவரது குடும்பத்தினரோடு வீடியோ காலில் பேச வைத்தும் உறுதிப்படுத்தியுள்ளனர். நன்னிலம் வட்டம், கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபர், மளிகைக் கடை நடத்தி வந்ததும் சிகிச்சைக்காக வெளியில் வந்தபோது காணாமல் போனதும் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில் குடும்பத்தோடு அந்த நபர் இணைந்த நெகிழ்ச்சி சம்பவமும் நடந்தது. இதேபோல், சென்னையைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்துள்ளார். அவருக்கும் சிகிச்சையளித்து குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளனர்.
குடும்பத்தோடு சேர்த்து வைத்த மருத்துவர்!
” தீவிர மனநோய் இருக்கும்போது நோயாளி கோபப்படுவார். அவர்களால் குடும்பத்துக்கு வருமானமும் இருக்காது. அவர்களைப் பார்த்துக் கொள்ள முடியுமா என்ற தயக்கமும் இருக்கும். இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தினருக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அவர் சுமை கிடையாது என்பதை உணர்த்துகிறோம். தீவிர மனநோயாக இருந்தாலும் அதற்கு அறிவியல்பூர்வமான சிகிச்சை உள்ளது.
தன்னையறியாமல் சுற்றிக் கொண்டிருந்தவர்களால், `வேலைக்குச் செல்லும் அளவுக்கு மீண்டு வர முடியும்’ என்பது எங்களின் அனுபவமாக உள்ளது. மருந்து உள்பட அனைத்து சேவைகளும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் போல தொடர் சிகிச்சையின் மூலம் மீண்டு வர முடியும். கேரம், சதுரங்கம் என மூளைக்கு வேலை கொடுக்கக் கூடிய விளையாட்டுகளை சொல்லித் தருகிறோம். மறுவாழ்வு சிகிச்சையும் வழங்கப்பட்டு, மாற்றுத் திறனாளி சான்றிதழும் வழங்கப்படுகிறது” என்கிறார், புதுக்கோட்டை அரசு மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம்.
”கொரோனா காலத்தில் அவர்களுக்கு மருந்துகளைக் கொடுப்பதில் தடைகள் இருந்ததா?” என்றோம். ”புற நோயாளிகள் பிரிவில் எந்தவிதத் தடையும் இல்லாமல் பார்த்துக் கொண்டோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள் பிணியாளர்களில் 55 பேரில் 15 பேருக்கு சிகிச்சையளித்து அவர்களைக் குடும்பத்துடன் சேர்த்து வைத்தோம். ஆதரவற்ற நோயாளிகளை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மீட்டு, அவர்களுக்கு சிகிச்சையளித்து குடும்பத்துடன் சேர்த்து வைத்தோம். மனநலம் பாதிப்புள்ளவர்களுக்காக மாவட்ட மனநலத் திட்டம் என்ற ஒன்று செயல்படுகிறது.
இந்தத் திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 32 மாவட்டங்களிலும் உள்ளது. அந்தத் திட்டத்தில் மனநல மருத்துவர், உளவியல் ஆலோசகர், மனநல சமூகப் பணியாளர், பல்நோக்குப் பணியாளர் என்ற குழு உள்ளது. இந்தக் குழுவின் பணியானது, மனநல சேவைகள் தொடர்பான விழிப்புணர்களை வழங்குவது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநலம் தொடர்பான மருந்துகளைக் கொடுப்பதுதான் பணி. கொரோனா காலத்தில் எந்த வேலைகள் இருந்தாலும் மனநலம் பாதித்தவர்களுக்குத் தினசரி சிகிச்சைகளை வழங்கினோம்” என்கிறார்.
வேலைப்பளு அதிகரித்ததா?
இறுதியாக, ”மனநலம் பாதித்தவர்களைக் கையாள்வதில் அலட்சியம் இருந்ததாகச் சொல்கிறார்களே?” என கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பூர்ணசந்திரிகாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ”கோவிட் முதல் அலையின்போது அனைவருக்கும் இருந்த அதே அச்சம் எங்களுக்கும் இருந்தது. இங்கு உள் பிணியாளர்களிடம் எந்தளவுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வது என்பதில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
அவர்களில் பலர் கை கழுவ மாட்டார்கள், சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்க முடியாது. அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக புரோட்டாகால் வெளியிடப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரையும் கொரோனா தடுப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வைத்தோம். அதன்பிறகு அதனை அவர்களே கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், ”மனநல மருத்துவமனைக்குள்ளும் நாங்கள் பார்வையாளர்களையும் அனுமதிக்கவில்லை. காய்ச்சல் இருந்தால் நுழைவாயிலிலேயே நிறுத்திவிட்டோம். மற்ற மருத்துவமனைகளையெல்லாம் கோவிட் வார்டாக மாற்றிவிட்டனர். இதனால் அனைத்து இடங்களிலும் மனநல சிகிச்சைக்கான சேர்க்கை குறைந்துவிட்டது. குறிப்பாக, அனைத்து வார்டுகளும் பொது வார்டாக மாறிவிட்டதால், எங்களை நோக்கித்தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வந்தனர். இதனால் எங்களின் வேலைப்பளு அதிகரித்துவிட்டது.
இயல்பு நிலை திரும்பியதா?
மனநலம் பாதிப்பு பிளஸ் கொரோனா பாதிப்பு என்ற அடிப்படையிலும் நோயாளிகள் வந்தனர். அவர்களையும் நாங்கள்தான் பார்த்துக் கொண்டோம். இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சென்னையில் எங்கே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும் இங்கேதான் அனுப்பி வைத்தனர். அவர்களை தனிமைப்படுத்தும் வார்டில் வைத்துப் பராமரித்தோம். சில இடங்களில் மனநலம் பாதித்தவர்களை அடிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் அதிகமானபோதும் அவர்களையும் கோவிட் பரிசோதனை செய்துவிட்டு அனுமதித்தோம். சொல்லப்போனால், கோவிட் நேரத்தில் மாநிலத்துக்கான தேவைகளைத் தீர்க்கும் மையமாக மனநல மருத்துவமனை செயல்பட்டது.
மாவட்ட மனநல மருத்துவத் திட்டத்தின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் எண்களையும் வைத்து 104 சேவை எண் மூலம் மாத்திரைகளை கொடுப்பது, மனநல பிரச்னைகளை சரிசெய்வது எனத் தீவிரமாகச் செயல்பட்டோம். மேலும், எங்கே மாத்திரை கிடைக்கும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மற்ற மருத்துவமனைகளில் மனநல மருந்துகளைக் கொடுக்காததால் நாங்களே வழங்கினோம். கொரோனா தொற்று நேரத்திலும் நாளொன்றுக்கு 200 பேர் சிகிச்சைக்காக வந்தனர். இன்றைய கணக்கின்படி 571 பேர் வந்துள்ளனர். உள்நோயாளிகளாக 900 பேர் உள்ளனர். அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது” என்கிறார்.
தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு இல்லை!
”கொரோனா தொற்றால் சிலர் இறந்ததாகத் தகவல் வெளியானதே?” என்றோம். ”இல்லை, யாரும் இறக்கவில்லை. அனைவருக்கும் தடுப்பூசியை போட்டுவிட்டோம்” என்றார்.
”மனநல நோயாளிகளுக்கு மருந்து செல்வதில் தடைகள் இருந்ததாகச் சொல்கிறார்களே?” என்றோம். ”ஆமாம். சில தடைகள் இருந்தன. மாத்திரை தயாரிப்பதற்கான மூலப்பொருள் மகாராஷ்ட்ராவில் இருந்து வர வேண்டியிருந்ததால் சற்று தாமதம் ஏற்பட்டது. அதேநேரம், உள்ளூரில் சில மருந்துகள் போதுமான அளவுக்கு இருந்தன. அரசும் தடையில்லா சான்று கொடுத்ததால் நாங்களே உள்ளூரில் கொள்முதலும் செய்து கொண்டோம். நோயாளிகளுக்கு குரியர் மூலமாகவும் மருந்துகளை அனுப்பினோம்.
எங்கள் மருத்துவர்களும் கோவிட் மையங்களில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கொரோனா வார்டுக்குச் சென்றாலும் எங்கள் மருத்துவமனையில் இருந்த கொரோனா வார்டையும் நன்றாகப் பார்த்துக் கொண்டோம். தற்போது எந்த நோயாளி வந்தாலும் கோவிட் நெகட்டிவ் இருந்தால்தான் அனுமதியளிக்கிறோம். இதுவரையில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் 900 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு இல்லை” என்கிறார்.
(நன்றி BBC Tamil)