இந்தியர்கள் உதவினர்: ஆப்கன் பெண் நன்றி

புதுடில்லி: ‛‛ஆப்கனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், எங்களை இந்திய சகோதரர், சகோதரிகள் மீட்டனர்,” என, அங்கிருந்து மீட்கப்பட்ட ஆப்கன் பெண் கூறினார்.

தலிபான் பயங்கரவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றியதால், ஆப்கனில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூலில் பதற்றம் நிலவுகிறது. விமான நிலையத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காத்திருக்கின்றனர்.

நேற்று அங்கிருந்து தப்ப முயன்ற 150 இந்தியர்கள், காபூல் விமான நிலையம் அருகே தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பல மணி நேர விசாரணைக்குப் பின், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தலிபான்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று(ஆக.,22) காபூலில் இருந்து 107 இந்தியர்கள், 24 ஆப்கன் வாழ் சீக்கியர்கள் மற்றும் 2 அந்நாட்டு எம்.பி.,க்கள் உள்ளிட்ட 168 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் டில்லி அருகே உள்ள விமானப்படை தளத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

டில்லி வந்தவர்களில் ஆப்கனைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். ஒரு கைக்குழந்தையை பாஸ்போர்ட் இல்லாமல், இந்திய அதிகாரிகள் டில்லி அழைத்து வந்தனர்.

இந்தியாவுக்கு நன்றி

டில்லி வந்த பின்னர் ஆப்கனை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‛‛ஆப்கனில் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. எனது வீட்டை தலிபான்கள் எரித்து விட்டனர். இதனால், நான், எனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. என்னை, இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரிகள் தான் மீட்டனர். எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,” எனக்கூறினார்.

கோவிட் பரிசோதனை

ஆப்கனில் இருந்து டில்லி அழைத்து வரப்பட்டவர்களுக்கு விமான படை தளத்தில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது.

 

(நன்றி Dinamalar)