நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் செயல்படும் என்றும் மக்கள் அதன் மூலம் பயன்பெறலாம் என்றும் அதிரடி அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை எனக் கொடிய தொற்று நோய் எளிதாகப் பரவி மக்கள் மத்தியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் மூன்றாவது அலையும் விரைவில் பரவும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என விழிப்புணர்வுகள் பரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி 24 மணிநேரமும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் செயல்படும் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி மக்களுக்குச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு வகை தடுப்பூசிகளும் தற்போது போதிய அளவு இருப்பு உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி Tamil samayam)