பெங்களூரு:
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்தார். அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த போது, அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறி இருப்பதாகவும், சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அந்த குழு சிறையில் நேரில் ஆய்வு செய்ததுடன், தீவிர விசாரணை நடத்தியது.
பின்னர் அந்த குழு, சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியதாகவும் கூறி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. இதையடுத்து இதுதொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் ஆகியும், ஊழல் தடுப்பு படை போலீசார் ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இதையடுத்து, சென்னையை சேர்ந்த கீதா என்பவர், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார்.
அதில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கு விசாரணையை ஊழல் தடுப்பு படை போலீசார் தாமதமாக விசாரித்து வருவதாகவும், இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் மனுவில் கூறியிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் ஐகோர்ட்டு நீதிபதி இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு உத்தவிட்டார்.
மேலும் இந்த மனு விசாரணையின் போது கர்நாடகா நீதிமன்றம், விசாரித்தவரை உள்ள தகவல்களை குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சீலிடப்பட்ட உறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு செப்டம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
(நன்றி Dailythanthi)